காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் தனது நடைபயணத்தில் உள்ளார். அந்த வகையில், ஜாலவார் மாவட்டத்தில் ராகுல் இன்று காலை தனது பயணத்தை தொடங்கினார். அப்போது, சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்று நடந்தது.
ஜாலவார் மாவட்ட பாஜக அலுவலகம் வழியாக அவர் நடைபயணத்தை மேற்கொண்டபோது, அந்த அலுவலகத்தின் மாடியில் இருந்து சிலர் அந்த யாத்திரையை வேடிக்கை பார்த்தனர். அப்போது, பாஜக அலுவலகத்தை பார்த்த ராகுல் காந்தி, அவர்களை நோக்கி கை அசைத்து, Flying Kiss கொடுத்தார். இதன் வீடியோவை ராஜஸ்தான் இளைஞர் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
नफ़रत का जवाब सिर्फ़ मोहब्बत है !!
ये तस्वीर देखिये.. pic.twitter.com/IHkagK97xW— Rajasthan Youth Congress (@Rajasthan_PYC) December 6, 2022
அந்த அலுவகத்தில் பெரிய அளவில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் ராஜஸ்தான் பாஜக தலைவர்களஇன் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா, முன்னாள் ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.
காந்தி ராஜஸ்தானில் தனது நடைபயணத்தை மேற்கொண்டாலும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து அஜய் மக்கன் தனது ராஜினாமா செய்ததையடுத்து, பஞ்சாப் மூத்த காங்கிரஸ் தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவை அந்த பொறுப்பிற்கு காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது.
ராகுல் காந்தி இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மொத்தம் 3,500 கி.மீ., தூரத்தை 150 நாள்களில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். 12 மாநிலங்களில் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் அவர் தனது நடைபயணத்தை முடித்து தற்போது ராஜஸ்தானில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.