மொத்தம் 250 வார்டுகளை கொண்ட தலைநகர் டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான வார்டுகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. டெல்லி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆம் ஆத்மி கட்சி 132 இடங்களிலும், பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மொத்தம் உள்ள 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற 126 இடங்களில் பெரும்பான்மை பெற வேண்டும் என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது.
டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோலோட்சி வந்த பாஜகவின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியினர் இணிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆம் ஆத்மி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்த வெற்றிக்காக டெல்லி மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், மாற்றத்தை கொண்டு வந்ததற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பொறுப்பினை கொடுத்த டெல்லி மக்களுக்கு நன்றி. உங்கள் நம்பிக்கையை நிறைவேற்ற இரவு பகலாக உழைப்பேன்.” என்றார்.
டெல்லி மாநகராட்சி வளர்ச்சிக்காக காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்பை கோரிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியை சிறப்பாக மாற்ற பிரதமரின் ஆசியை கோருவதுடன் மத்திய அரசிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு செய்தியை டெல்லி மக்கள் இன்று வழங்கியுள்ளனர் என்றார்.
முன்னதாக, தேர்தல் வெற்றி குறித்து டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சியை நம்பியதற்காக டெல்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றி. உலகின் மிகப்பெரிய மற்றும் எதிர்மறையான கட்சியை தோற்கடித்ததன் மூலம், டெல்லி மக்கள் நேர்மையான மற்றும் உழைக்கும் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை வெற்றிபெறச் செய்துள்ளனர். இது வெறும் வெற்றியல்ல, பெரிய பொறுப்பு.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சி இந்த முறை வெற்றி பெறும் என கணித்திருந்தது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.