வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அடிப்படை உரிமை மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதி என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்றைய (டிச.,7) விசாரணையின் போது, ல்லிக்கட்டு என்பது மனிதர்களின் நன்மைக்கானதாக இருக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், ‛ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அடிப்படை உரிமை மற்றும் கலாசாரத்தின் ஒரு பகுதி. ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?
ஐல்லிக்கட்டு துவங்கும் முன் காளைகள் மருத்துவர்களால் முழுமையாக பரிசோதனை செய்யப்படுகின்றன. கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, பல சிறந்த நடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’ என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‛ஜல்லிக்கட்டிற்கு முன்பு கால்நடை மருத்துவர்களால் பரிசோதனை செய்யப்படும் காளைகள், ஐல்லிக்கட்டிற்கு பிறகு பரிசோதனை செய்யப்படுகிறதா?’ என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், ‛ஜல்லிக்கட்டு துவங்கும் முன் சோதனை நடத்துவது போல் போட்டிக்கு பின்னரும் சோதனை நடத்த தயார்.
ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்த உச்சநீதிமன்றம் வேண்டுமானால் தேவைப்பட்டால் கூடுதல் விதிமுறைகளை வழங்கலாம். கூடுதல் விதிமுறைகளை வழங்கினால் அதனை பின்பற்ற தயார்’ எனக் கூறி தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement