பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது . நாளான நேற்றைய (06) தினம் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, பண்டி உர விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. சோள உற்பத்தியாளர்களுக்கும் உரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சேதனப் பசளையும் விநியோகிக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெயரை விட குறைந்த நிலங்களுக்கான உர விநியோகம் இலவசமாகும். அறுவடைக் காலப்பகுதியில் எரிபொருள் இலவசமாக வழங்கப்படவிருக்கிறது. நெல்லின் விலை தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்
எங்கள் மாவட்டத்தில் இந்தாண்டு பெரும்போக பயிர்ச்செய்கை வழமைபோல நடக்கவில்லை. சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறி எதுவும் இம்முறை வழமைபோல பயிரிடப்படவில்லை. யாழ்ப்பாணத்தின் விவசாய நிலங்கள் புற்களும் புதர்களுமாக நிரம்பிக்கிடக்கிறது.
யாழ். மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபை எனக்கு வழங்கியுள்ள கோரிக்கை கடிதத்தை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன்.
தற்போது மீனவர்களுக்கு மண்ணெண்ணை விநியோகம் இடம்பெற்றாலும், விவசாயிகளுக்கான விநியோகம் போதாது. இந்த வருட தொடக்கத்தில் 87 ரூபாய் விற்ற மண்ணெண்ணைகூட இப்போது பெற்றோலின் விலைக்கு கிட்ட வந்துவிட்டது. அதுவும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே அதற்கான மானிய பொறிமுறையை விரைவாக உருவாக்க வேண்டும்.
ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் கிணறுகளில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் இறைக்க வேண்டிய நிலமைதான் உள்ளது. ஒரே நாளில் டீசல் அல்லது சோலர் அல்லது மின்சார பம்ப் இயந்திரங்களாக மாற்றக்கூடிய வல்லமை எங்களிடம் இல்லை. இதை நாங்கள் பல தடவைகள் எடுத்துக்கூறியும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்?
- மேட்டுநில மரக்கறி விவசாயிகளுக்கு நியாய விலையில் உரம் வழங்க வேண்டும்.
- கிருமிநாசினி, பங்கஸ்நாசினி, களைநாசினிகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும்
– விவசாயிகளுக்கு நியாய விலையில் அவற்றை வழங்க வேண்டும்
எப்போதும் விவசாயத்தை வாழ்க்கையாக கொண்டிருந்த எங்கள் மக்கள் இப்போது விவசாயமே போதும் என்ற விரக்தி நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த சபைக்கே தெரியும், எங்கள் மாவட்டத்தின் விவசாய புரட்சியினுடைய வரலாறு. தன்னிறைவு பொருளாதாரத்தை விவசாயத்தால் கட்டியெழுப்பியவர்கள் எங்கள் மக்கள். அவர்கள் இப்போதும் விவசாயத்தை கட்டியெழுப்ப தயாராக உள்ளார்கள். அவர்களுக்கு அரசாங்கம் ஆதரவாக இருக்குமா என்பதே இங்கு கேள்வி.
அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளினால், நாட்டின் நெல் உற்பத்தி 45 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். உணவு பாதுகாப்பும் குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது. உரம், கிருமிநாசினிகள் என்பனவற்றின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். சோளச் செய்கையும் அழிவுக்குள்ளாகியிருக்கிறது. முட்டை உற்பத்தி குறைவடைந்துள்ளமையினால், மந்த போஷணையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்க அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி கூறினார். ஆயுர்வேத சட்டத்திற்கு அமைய, மூலிகை என்ற அடிப்படையில் மாத்திரம் கஞ்சா பயிரிடப்படவிருப்பதாக அவர் கூறினார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அடுத்த வருடம் மின்வெட்டு நீடிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது நாளொன்றுக்கு 6 – 8 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு நீடிக்கப்படலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த கால நட்டங்களை ஈட்டிக் கொள்ளும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் கூடுதலான வினைத்திறனை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.