புதுடெல்லி: பஞ்சாபில் கள்ளச் சாராய உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஜித் சின்ஹா, “கள்ளச் சாராய உற்பத்தி விவகாரத்தில் மாநில அரசு பெரும் சவாலை எதிர்கொள்கிறது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களில் 13,000 கள்ளச் சாராய உற்பத்திக் கூடங்களை அரசு மூடியுள்ளது” என்றார்.
இதற்கு நீதிபதிகள், “பஞ்சாப் சர்வதேச எல்லையை கொண்டுள்ளது. போதைப் பொருள் மற்றும் கள்ளச் சாராயம் மூலம் அந்நிய சக்திகள் மாநில இளைஞர்களை பாழாக்க வாய்ப்புள்ளது. எனவே இது மிகப்பெரிய பிரச்சினை. கடந்த 2020-ல் விஷ சாராய சம்பவத்தில் 120 பேர் இறந்துள்ளனர். இதுபோல் மற்றொரு சோகம் நடக்கும் வரை காத்திருக்க வேண்டாம். கள்ளச் சாராய உற்பத்திக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச் சாராய உற்பத்திக்கு எதிராக எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.