கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 3 பேரை தேசிய முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவை கோட்டைமேட்டில் கடந்த மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முபின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வெடிகுண்டை வெடிக்க வைத்து நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாரூதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர போலீசார் கடந்த சில நாட்களாக ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், முகமது தவுபிக், உமர்பாரூக், பெரோஸ்கான் ஆகியோரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
newstm.in