புதுச்சேரி: “சென்னை உயர் நீதிமன்றத்துக்கான புதுச்சேரி அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக நீதி விசாரணை தேவை. துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கத்தில் உடன்பாடு இல்லை. இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்று புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தலைவர் குமரன் அறிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் புதுச்சேரியைச் சேர்ந்தோர் தவிர்த்து தமிழகம், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 32 பேரில் 6 பேர் வெளிமாநிலத்தவர்கள். புதுச்சேரி அரசு பரிந்துரைத்தோரில் இருவர் நிராகரிக்கப்பட்டுள்ளனர். சட்டத்துறை செயலருக்கு எதிராக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தை புறக்கணித்து விசாரணை கோரினர்.
சட்டத்துறை செயலர் கார்த்திகேயன் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சூழலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் தந்தார். அதில், ‘வழக்கறிஞர் தேர்வில் எங்கள் தலையீடு இல்லை. புதுச்சேரி இதில் புறக்கணிக்கப்படவில்லை. சட்டத்துறை செயலர் மாற்றமானது வழக்கமானது. அதிகாரிகள் கூறியதைக் கேட்டு ஆளுநர் அப்படியே கையெழுத்து போட்டார் என சொல்வது தவறானது’ என்று விளக்கம் தந்தார்.
ஆளுநர் விளக்கம் தொடர்பாக புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் குமரன் இன்று வெளியிட்ட அறிக்கை: ”அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் தந்துள்ளார். இதுதொடர்பாக புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் எங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
துணைநிலை ஆளுநரின் விளக்கங்களோடு வழக்கறிஞர் சங்கத்துக்கு உடன்பாடு இல்லை. அதில் உள்ள கருத்தில் மாறுப்பட்டு உள்ளோம். வழக்கறிஞர் சங்கத்தின் கோரிக்கை ஏற்று முறையான நீதி விசாரணை வைத்தால் எங்கள் சங்கம் அங்கு தெளிவுப்படுத்தும். புதுச்சேரி வழக்கறிஞர் சங்கம் இதுதொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.