மாண்டஸ் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழைக் காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்தது. இந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்படுகிறது.
இந்த புயலால் வரும் 8 மற்றும் 9 ஆம் தேதி, தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கன
மழை
பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதன்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
இதற்கிடையே, “புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என்றும், நாளை முதல் 10 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், அதி கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு, வரும் 8 மற்றும் 9 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.