தலைநகர் டெல்லியில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 7ஆம் தேதி (இன்று) முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை முதல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையுல், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான வார்டுகளை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. டெல்லி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆம் ஆத்மி கட்சி 126 இடங்களிலும், பாஜக 97 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
மொத்தம் உள்ள 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற 126 இடங்களில் பெரும்பான்மை பெற வேண்டும் என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி அந்த இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியினர் இணிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் வெற்றி குறித்து டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சியை நம்பியதற்காக டெல்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றி. உலகின் மிகப்பெரிய மற்றும் எதிர்மறையான கட்சியை தோற்கடித்ததன் மூலம், டெல்லி மக்கள் நேர்மையான மற்றும் உழைக்கும் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவாலை வெற்றி பெறச் செய்து உள்ளனர். இது வெறும் வெற்றி அல்ல, மிகப் பெரிய பொறுப்பு.” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 250 வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறித்தியிருந்தது. காங்கிரஸ் சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இது தவிர சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சி இந்த முறை வெற்றி பெறும் என கணித்திருந்தது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
ஒன்றுப்பட்ட டெல்லி மாநகராட்சி டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என 3 மாநகராட்சிகளாக 2011-2022 வரை பிரிக்கப்படிருந்தது. கடந்த மே மாதம் இவை அனைத்தும் மீண்டும் ஒருங்கிணைப்பட்டு டெல்லி மாநகராட்சியாக 250 வார்டுகளுடன் மாற்றப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 181 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.