புதுடெல்லி: நாடு முழுவதும் 56 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, கடந்த 2017 முதல் 2022 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 18 மாநிலங்களைச் சேர்ந்த 56 எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 22 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
18 மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இங்கு மக்கள் பிரதிநிதிகள் 10 பேருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசமும், கேரளாவும் 2ம் இடம் பிடித்துள்ளன. இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் 6 பேருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா 5 மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 4 பேருக்கு எதிராகவும், டெல்லி மற்றும் பிஹாரில் தலா 3 பேருக்கு எதிராகவும், கர்நாடகா மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த தலா 2 பேருக்கு எதிராகவும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. ஹரியாணா, சத்தீஸ்கர், மேகாலயா, உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.