புகழ்பெற்ற ஓவியரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான மனோகர் தேவதாஸ் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.
1936-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி, மதுரையைச் சேர்ந்த மருத்துவரான ஹாரி ஜேசுதாசன் மற்றும் மாசிலாமணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் மனோகர் தேவதாஸ். 1953-ம் ஆண்டு கலை மற்றும் வேதியியலில் சிறந்து விளங்கிய மனோகர் தேவதாஸ் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வி முடித்தார். தனது 12 வது வயதில் கண் பார்வை படிப்படியாகக் குறைந்து வருவதை அவர் உணர்ந்தார். அதன் விளைவாக அவருக்கு 32 வது வயதில் கண் குறைபாடு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தேவதாஸ் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தீவிரமாக ஓவியம் வரையத் தொடங்கினார். மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1957-ம் ஆண்டு வேதியியலில் இளங்கலை முடித்தார். இவரது தந்தை மாரடைப்பால் மறைந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றினார்.
பின்னர் சென்னையில் உள்ள பேட்டரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றத் தொடங்கினார். பேட்டரி உற்பத்தியில் சிறந்து விளங்கிய இவர், இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட நிபுணரானார். அமெரிக்காவில் 1972-ல் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு இந்தியா திரும்பினார்.
மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுயமாக கற்றுக் கொண்ட ஓவியக்கலையைப் பயன்படுத்திப் பல ஓவியங்களை வரைந்து உள்ளார். இந்த ஓவியங்களின் விற்பனை வருமானத்தை தொண்டுக்காக செலவு செய்தார்.
சிறுவயதிலேயே தனக்கு கண் குறைபாடு இருந்ததால் சங்கர நேத்ராலயா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய விருது பெற்ற ஆராய்ச்சி மருத்துவமனைக்கு ஆதரவாக உதவினார். இந்த இரண்டு மருத்துவமனைகளும் தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளுக்கு இலவச கண் சிகிச்சை வழங்குகின்றன.
இந்நிலையில், ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற விழித்திரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஓவியர் மனோகர் தேவதாஸ், சென்னையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.