தமிழகத்தில் 11-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தென்கிழக்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து இன்று மாலை புயலாக வலுபடைய கூடும் என்பதால் தமிழகத்தில் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், நாளை மறுநாள் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
10/12/2022: தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11/12/2022: திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலையாக 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.