விஜய் 67 – பரபரப்பாக நடக்கும் முன்னோட்ட வீடியோ ஷுட்
'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் இணையும் விஜய்யின் 67வது படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ புகைப்படங்களையும், அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்காக ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர். அது போலவே விஜய் 67 படத்திற்காகவும் ஒரு முன்னோட்ட வீடியோவுடன் பட அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. விஜய் அதில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் கடும் பாதுகாப்பு போட்டிருக்கிறார்கள். படக்குழு தவிர வேறு யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாதாம்.
விஜய் 67 படப்பிடிப்புக்காக அரங்கம் அமைக்கும் பணிகள் சென்னை, பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடந்து வருகிறதாம். அங்கு முதல் கட்டப் படப்பிடிப்பு நடத்தி முடித்த பின் காஷ்மீர் செல்ல உள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் முன்னோட்ட வீடியோவுடன் விஜய் 67 பற்றிய அறிவிப்பு வெளிவரும். அது விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இருக்கும் என்கிறார்கள்.