ஈரோடு, மேட்டூர் ரோட்டில் முனிசிபல் காலனி பிரிவு சாலையையொட்டி செல்போன் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமின் பங்குதாரர்களாக கோவையைச் சேர்ந்த தரணிதரனும், ஈரோட்டைச் சேர்ந்த பூபதியும் இருக்கின்றனர். ஷோரூமை கௌதம், கார்த்திக் ஆகிய இருவரும் பொறுப்பில் எடுத்து நடத்தி வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல ஷோரூமை பூட்டிவிட்டு, கௌதம், கார்த்திக் ஆகிய இருவரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
நேற்று நள்ளிரவில் செல்போன் ஷோரூமுக்கு முன்புறம் அழுக்கு லுங்கி, அழுக்கு மூட்டையுடன் ஒரு நபர் வந்து கடையின் ஷட்டர் முன்புறம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். இந்த நபர் அதிகாலையில் சத்தமே இல்லாமல் அந்த ஷட்டரின் பூட்டை லாவகமாக உடைத்து, ஷட்டரை சத்தமேயில்லாமல் ஒரு ஆள் மட்டும் உள்ளே செல்லும் அளவுக்கு தூக்கி உள்ளே புகுந்தார். கடைக்குள் சென்றதும், ஷட்டரை இறக்கிவிட்டு உள்ளே இருந்த விலையுயர்ந்த 50-க்கும் மேற்பட்ட செல்போன்களை தன்னுடன் கொண்டு வந்திருந்த அழுக்கு மூட்டைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாா்.
பின்னர் ஷோரூமில் இருந்த பணப்பெட்டியையும் உடைத்து அதில் வைத்திருந்த ரூ.5,000 ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராக்களில் அடுத்தடுத்து பதிவாகியிருந்தது. இன்று அதிகாலை 5 மணியளவில் பொருள்கள் கொள்ளை போயிருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவான நேரம் மூலம் தெரியவந்தது.
திருட்டில் ஈடுபட்ட நபர் எந்தவித சலனமும் இன்றி, அலட்டிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைவதும், அங்குள்ள பொருள்களை எந்த பதற்றமும் இன்றி மூட்டையில் அடுக்கி கொண்டு சென்றதும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் மூலம் தெரியவந்தது.
காலையில் அவ்வழியே சென்றவர்கள் ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு கௌதம், கார்த்திக் ஆகியோர் வந்த பிறகே கடையில் கொள்ளை போன பொருள்கள் குறித்து தெரியவந்தது.
அங்கு போலீஸார் விசாரணை நடத்தியதுடன் நிகழ்விடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கிடைத்த ரேகைகளை சேகரித்துக் கொண்டனர். இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். டவுன் டி.எஸ்.பி ஆனந்தகிருஷ்ணன் நிகழ்விடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். யாசகம் செய்பவர் போன்ற தோற்றமுடைய நபர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளதால், மாநகர் பகுதி முழுவதும் போலீஸார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பழைய குற்றவாளிகளின் பட்டியலில் உள்ள முக அமைப்பு, கைரேகைகளை ஒப்பிட்டும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.