"ஸ்டார்ட் அப்" திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அதிகரிக்கும் புதிய நிறுவனங்கள் – மத்திய அரசு

கடந்த மூன்று ஆண்டுகளில் “ஸ்டார்ட் அப்” திட்டத்தின் கீழ் தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்ட எண்ணிக்கைகள் குறித்தும், நிறுவனங்களை தொடங்குவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அளவு குறித்தும், எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ்.
அதில், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர், விருதுநகர் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டின் 602 நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும், 2020ம் ஆண்டில் 755 நிறுவனங்களும், 2021ம் ஆண்டில் 1,103 நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
image
2022ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி வரை 1,501 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 2019ம் ஆண்டில் 344 நிறுவனங்களும், 2020ம் ஆண்டு 380 நிறுவனங்களும், 2021ம் ஆண்டில் 515 நிறுவனங்களும், 2020ம் ஆண்டில் நவம்பர் 30ம் தேதி வரை 661 நிறுவனங்களும் ஸ்டார்ட் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க ஒதுக்கப்பட்ட முதலீடு குறித்து எந்த தகவலும் சேமிக்கப்படவில்லை என்றும், ஸ்டார்ட் அப் திட்டங்களை தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் விரிவுபடுத்த பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.