ஹிமாச்சலப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.
ஹிமாச்சல் தேர்தல்
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய் ராம் தாகூர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – காங்கிரஸ் இடையே இரு முனை போட்டி ஏற்பட்டது.
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், ஒருசில கருத்துக் கணிப்புகளில், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும், சிலவற்றில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தெரிய வந்துள்ளது.
குஜராத் தேர்தல்
குஜராத் மாநிலத்தில், முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவைத் தொகுதிகள். இங்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த 1 ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை, தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு ஆட்சியை மீண்டும் தக்க வைக்க வேண்டும் என்பது, பாஜகவுக்கு கவுரவப் பிரச்னையாக இருக்கிறது.
இந்தத் தேர்தலில், காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சி எனக் கூறப்பட்டாலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் டஃப் கொடுத்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், குஜராத் மாநிலத்தில், பெரும்பான்மையை தாண்டி, பாஜக மீண்டும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை
இந்நிலையில், குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. பிற்பகலுக்குள் இரண்டு மாநிலங்களில் யார் மீண்டும் ஆட்சியை கைப்பற்றப் போகின்றனர் என்பது தெரிய வந்து விடும்.
இதே போல், உத்தர பிரதேசம், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியும் நாளை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “சமயம் தமிழ்” இணையதளத்தை காணுங்கள்.