13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம்

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06.12.2022) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“கௌரவ ஜனாதிபதி அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம்.

இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை ,பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ,கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி எனக்கு  வழங்கியுள்ளார்.இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லை

கைப்பற்றப்பட்ட பழுதடைந்த இந்திய இழுவை மடி வலைப் படகுகளை பல்வேறு அழுத்தங்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் ஏலம் விட்டிருந்தோம். அந்நிதியை, மேற்படி இந்திய இழுவை மடி வலைப் படகுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு தீர்மாளித்துள்ளோம்.
அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளைத் திருத்தியமைத்து பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.