ஆக்ஸ்ஃபோர்டு, ஆண்டுதோறும் அந்த வருடத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைக்கு ‘இந்த ஆண்டிற்கான வார்த்தை’ என்ற அங்கீகாரத்தை வழங்கும்.
அந்தவகையில் முதல்முறையாக உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் மூலம் இந்த ஆண்டிற்கான வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஸ்னரி தேர்ந்தெடுத்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு லெக்ஸிகோகிராஃபர்ஸ் Metaverse, StandWith, Goblin Mode போன்ற மூன்று வார்த்தைகளைக் கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு மக்களிடம் கேட்டுள்ளனர். அந்த வகையில் ‘Goblin Mode’ என்ற இந்த வார்த்தை 3,18,956 வாக்குகளை பெற்றுள்ளது. 93 சதவிகிதம் பேர் இதனை தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் 2022- ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக ’Goblin Mode’ என்ற வார்த்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ‘Goblin mode’ என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்றால் பொதுவாக உள்ள விதிகள், கட்டுபாடுகள் ஆகியவற்றை நிராகரித்து அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனிநபர் அவரவர் விருப்பமானவற்றை செய்தல், தன் நலன் சார்ந்து சிந்தித்தல், சுயவிருப்பம், குற்றவுணர்வு இல்லாமல் தன்னை நேசித்தல் என்பதாகும்.
இது குறித்து பேசிய ஆக்ஸ்ஃபோர்டு மொழிகள் பிரிவின் தலைவர் காஸ்வர் கிராத்வோல், “இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையாக ‘Goblin mode’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தை என்பது, இந்த ஆண்டின் மக்களின் எண்ணங்கள், மனநிலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளது. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 2-ஆம் தேதி வரை ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. Metaverse, வார்த்தை 14,484 வாக்குகளும் மற்றும் StandWith என்ற வார்த்தை 8,639 வாக்குகளும் பெற்றுள்ளது” என்று கூறியிருக்கிறார்.