தேடிப் பார்ப்பதென்ற முடிவோடு இருக்கும் நபர்களுக்கு தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்த்தேடல் தொடங்கிட வழி செய்கிறது கூகுள் தேடு பொறி. உலகெங்கிலும் உள்ள மக்கள் டெக்ஸ்ட், ஸ்க்ரீன் மற்றும் படங்களின் வழியே தாங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்களை கூகுளில் தேடி தெரிந்துகொள்ள முடியும். இந்த சூழலில் நடப்பு ஆண்டான 2022-ல் இந்திய அளவில் இதுவரையில் கூகுள் தேடலில் எதெல்லாம் டாப் லிஸ்ட்டில் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிகம் தேடப்பட்ட பிரபலம், நிகழ்வுகள், விஷயங்கள், உணவு, விளையாட்டு மற்றும் திரைப்படங்கள் என இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கூகுள் வெளியிட்டுள்ளது.
- ஐபிஎல்
- கோவின், கோவிட் வேக்ஸின் Near Me
- ஃபிஃபா உலகக் கோப்பை 2022
- பிரம்மாஸ்திரா
- கே.ஜி.எஃப் 2
என இந்த ஐந்தும் 2022-ல் இதுவரையில் இந்தியர்களின் டாப் 5 தேடல்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கூகுள் வழியே நேட்டோ, பிஎஃப்ஐ, அக்னிபாதை திட்டம், ஆர்ட்டிகிள் 370 போன்ற விஷயங்களை விரிவாக தெரிந்துகொள்ள நம் நாட்டு மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
அதேபோல கூகுளில் உள்ள Near Me அம்சத்தை பயன்படுத்தி கரோனா தடுப்பு மருந்து, நீச்சல் குளம், வாட்டர் பார்க், மால் மற்றும் மெட்ரோ குறித்து பயனர்கள் அதிகம் தேடியுள்ளனர்.
பிரபலங்களை பொறுத்தவரையில் இஸ்லாமிய இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கிய நுபுர் சர்மா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், லலித் மோடி மற்றும் சுஷ்மிதா சென் போன்றவர்களை இந்தியர்கள் அதிகம் தேடியுள்ளனர்.
செய்தி நிகழ்வுகளை பொறுத்தவரையில் லதா மங்கேஷ்கர், சித்து மூஸ் வாலா, பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே போன்றவர்களின் மறைவு குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது. அதோடு ரஷ்யா உக்ரைன் போர், உத்தரப் பிரதேச தேர்தல், ஹர் கர் திரங்கா போன்றவை தேடப்பட்டுள்ளது.
உணவு பிரியர்கள் கூகுளில் அதிகம் தேடிய உணவுகளில் பன்னீர் பசந்தா, மொடக், செக்ஸ் ஆன் தி பீச் காக்டெயில், சிக்கன் சூப் போன்றவை இருந்துள்ளது.
கரோனா பெருந்தொற்று முடக்கத்திற்கு பிறகு விளையாட்டுக் களம் பழையபடி சூடு பிடித்துள்ளது. பார்வையாளர்களைப் போட்டி நடக்கும் மைதானங்களுக்குள் அனுமதித்து இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த நிலையில் 2022ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களாக ஐபிஎல், ஃபிஃபா உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, காமன்வெல்த் போன்றவை உள்ளன.
திரைப்படங்களை பொறுத்தவரையில் பிரம்மாஸ்திரா, கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2, தி காஷ்மீர் ஃபைல்ஸ், ஆர்ஆர்ஆர், காந்தாரா, புஷ்பா, விக்ரம், லால் சிங் சத்தா, த்ரிஷ்யம் 2, விக்ரம், தோர் முதலான படங்கள் டாப் லிஸ்டில் உள்ளன.