ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அக்கட்சி சார்பில் முதல்வராக யார் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேச முதல்வர் பதவிக்கான போட்டியில் பிரதிபா சிங், சுக்விந்தர் சிங் சுகு, முகேஷ் அக்னிஹோத்ரி, தாகுர் கவுல் சிங், ஆஷா குமாரி ஆகியோர் உள்ளனர். இவர்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்.
பிரதிபா சிங்: இமாச்சலப் பிரதேசத்தின் செல்வாக்கு மிக்க தலைவராகவும் முதல்வராகவும் இருந்து மறைந்த வீரபத்ர சிங்கின் மனைவி இவர். இவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் இவர் போட்டியிடவில்லை. எனினும், முதல்வர் பதவிக்கான போட்டியில் இவர் முன்னணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சுக்விந்தர் சிங் சுகு: இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரக் குழு தலைவராக பணியாற்றியவர் இவர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் என நம்பப்படுகிறது. அதேநேரத்தில், வீரபத்ர சிங்கின் குடும்பத்திற்கு பரம எதிரி என்றும் கூறப்படுகிறது. இவர் இந்த தேர்தலில் நதோன் தொகுதியில் போட்டியிட்டார்.
முகேஷ் அக்னிஹோத்ரி: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர். சட்டப்பேரவை தேர்தலில் 4 முறை வெற்றி பெற்றவர். வீரபத்ர சிங் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். பிரதிபா சிங் இவரை ஆதரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாகுர் கவுல் சிங்: மாண்டி மாவட்டத்தில் உள்ள தர்ரங் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். வீரபத்ர சிங்கின் குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமாக இருப்பவர். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு இவர் தோல்வி அடைந்தார். இம்முறை மீண்டும் போட்டியிட்டுள்ளார்.
ஆஷா குமாரி: டல்ஹவுசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதன் பொறுப்பாளராக இருந்தவர். ராஜ பரம்பரையைச் சேர்ந்த இவர், சத்தீஸ்கர் அமைச்சர் டி.எஸ். சிங்கின் சகோதரி. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் வலிமையான பெண் தலைவராக இவர் பார்க்கப்படுகிறார். இவர்கள் மட்டுமின்றி, ஹர்ஷ்வர்தன் சவுகான், ராஜேஷ் தர்மானி ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கான போட்டியில் அடிபடுகிறது.
பூபேஷ் பெகல் பேட்டி: இமாச்சலப் பிரதேசத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று இமாச்சலப் பிரதேச தேர்தல் பொறுப்பாளரும் சத்தீஸ்கர் முதல்வருமான பூபேஷ் பெகல் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தியின் 10 வாக்குறுதிகள் இமாச்சலப் பிரதேச தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியை ஈட்டித் தந்துள்ளதாகக் கூறியுள்ள அவர், குஜராத்தில் பாஜக ஆச்சரியம் அளிக்கும் வெற்றியை பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.
4 மணி நிலவரம்: இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், அருதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 35 இடங்களுக்கும் மேலாக வெற்றி பெறும் நிலையில் அக்கட்சி உள்ளது. பாஜக 14 இடங்களில் வெற்றி; 12 இடங்களில் முன்னிலை என 26 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.