இமாச்சல்: வெற்றிச் சான்றிதழ் பெற்ற கையோடு எம்.எல்.ஏ.க்களை சத்தீஸ்கர் அழைத்துச் செல்ல காங்கிரஸ் திட்டம்

ஷிம்லா: இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது. பாஜக 25 தொகுதிகளிலும், சுயேட்சைகள் மூன்று தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றவுடன் அவர்களை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லுமாறு பிரியங்கா காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்எல்ஏக்கள் கட்சித் தாவலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜக சுயேட்சைகளின் ஆதரவைக் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, காங்கிரஸில் இருந்து தாவும் எம்எல்ஏக்கள் ஆதரவையும் திரட்டலாம் என்பதால், காங்கிரஸ் முன்னெச்சரிக்கையாக தனது எம்எல்ஏக்களை பத்திரப்படுவதாக தெரிகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹரியாணா முதல்வர் பூபீந்திர சிங் ஹூடாவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இமாச்சல் வெற்றிக்கு வித்திட்ட பிரியங்கா காந்தி: இமாச்சலப் பிரதேசத்தைப் பொறுத்தவரை மாறிமாறி காங்கிரஸும், பாஜகவும் தான் ஆட்சியில் இருந்திருக்கின்றன. இருப்பினும் இந்த முறை காங்கிரஸின் வெற்றியை மாநிலத்தில் உறுதி செய்ய உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பெரும் பங்காற்றியுள்ளார். அவரது பிரச்சாரம் இமாச்சல் மக்கள் மத்தியில் காங்கிரஸ் அபிமானத்தை மீட்டெடுத்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் இமாச்சலின் சாலோன் பகுதியில் பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவரது முதல் பிரச்சாரம் மக்களைக் கட்டிப் போட்டது. 1971 ஆம் ஆண்டு தான் இமாச்சலப் பிரதேசம் தனி மாநிலமாக உருவானது. இதற்கான சட்டத்தை இந்திரா காந்தி தலைமையிலான அரசு 1970 டிசம்பர் 18ல் நிறைவேற்றியது. அதன் பின்னர் ஜனவரி 25, 1971ல் இந்திரா காந்தி இமாச்சலில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதை மேற்கோள் காட்டிதான் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார்.

“1971ல் இமாச்சலில் இந்திரா காந்தி ஒரு பொதுக்கூட்டம் நடத்தினார். அன்றைய தினம் கடும் குளிர் நிலவிக் கொண்டிருந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மக்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர். அந்தக் கூட்டத்தை சமாளிக்கும் அளவிற்கு பாதுகாப்பு வழங்கும் சூழல் இல்லை. ஆனால் இந்திரா காந்தி பின் வாங்கவில்லை. அவர் மக்களின் ஊடே நடந்து சென்றார். மக்கள் ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். கொட்டும் பனியில் ஒரு வரலாறு பதிவானது அன்று. அவருடை உரை முடியும் வரை மக்கள் அங்கிருந்து விலகவே இல்லை. அதனாலோ என்னவோ இந்திரா தனது அஸ்தி இமாலய மலையில் வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினார். இன்று நீங்கள் இமாலய மழையைப் பாருங்கள் அதில் இந்திராவும் இருக்கிறார். இமாச்சலுடன் உள்ள தொடர்பால் தான் நானும் இங்கோர் வீடு கட்டியுள்ளேன்” என்றார். பிரியங்காவின் இந்தப் பேச்சு இமாச்சல் மக்களை பழைய நினைவுகளுக்கு இட்டுச் சென்றதாக ஊடகங்களில் அப்போதே பேசப்பட்டது.

இன்று காங்கிரஸ் வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் சூழலில், பிரியங்கா காந்தி இமாச்சல் காங்கிரஸ் பிரமுகர்களுடன் அடுத்தடுத்த நகர்வுகள் குறித்து தொடர்ந்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தேர்தல் வெற்றிக்கான புகழ் பிரியங்காவையே சேரும் என்று உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் பெருமிதத்தோடு தெரிவிக்கின்றனர். | குஜராத் நிலவரம் > குஜராத் தேர்தல் முடிவுகள் | இமாச்சல் நிலவரம் > இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.