லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலை வகித்து வருகிறார்.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவருமான முலாயம் சிங் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி மெயின்புரி. அவரது மறைவை அடுத்து, அந்தத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் முலாயம் சிங் யாதவின் மருமகள் டிம்பிள் யாதவ், சமாஜ்வாதி கட்சி சார்பில் களமிறக்கப்பட்டார். அவருக்கு எதிராக பாஜக ரகுராஜ் சிங் சாக்யா என்பவரை களமிறக்கியது. இந்த இடைத்தேர்தலில் இரண்டு சுயேட்சைகள் உள்பட மொத்தம் 6 பேர் போட்டியிட்டனர்.
டிம்பிள் யாதவ் முன்னிலை: மெயின்புரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், நண்பகல் 1 மணி நிலவரப்படி டிம்பிள் யாதவ் 2 லட்சத்து 92 ஆயிரத்து 380 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் சாக்யா ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 598 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளரை விட டிம்பிள் யாதவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் அவர் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.
சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: உத்தரப் பிரதேசத்தின் இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரண்டிலும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. நண்பகல் 1 மணி நிலவரப்படி கத்தோலி தொகுதி இடைத்தேர்தலில் ராஷ்ட்ரிய லோக் தள் வேட்பாளர் மதன் பையா 36, 726 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் ராஜ்குமாரி 26 ஆயிரத்து 799 வாக்குகள் பெற்று பின்தங்கி உள்ளார். இதேபோல், ராம்பூர் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முகம்மது ஆசிம் ராஜா 25 ஆயிரத்து 604 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா 19 ஆயிரத்து 229 வாக்குகள் பெற்று பின் தங்கி உள்ளார்.