டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படவிருப்பதால், அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகமெங்கும் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சேலத்தில் மர்ம நபர் ஒருவர் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம், அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராணி. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் தன் வீட்டிலிருந்தபோது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் தெருவில் இருந்தவர்களுக்கு சாக்லேட் கொடுத்து வந்திருக்கிறார். அப்போது பொன்ராணியும் வீட்டுவாசலில் நின்று கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டிருக்கையில், அந்த நபர் பொன்ராணிக்கும் சாக்லேட் கொடுத்திருக்கிறார். சாக்லேட்டை வாங்கும்போது பொன்ராணியின் முகத்தில் மிளகாய் பொடி தூவிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்திலிருந்த 6.1/2 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிடோடியிருக்கிறார்.
உடனே பொன்ராணி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்ப்பதற்குள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர் அங்கிருந்து மாயமாகிவிட்டார். இது குறித்து பொன்ராணி கொடுத்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.
இந்தநிலையில், சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா சம்பந்தப்பட்ட்ட மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டிருக்கிறார். அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.