குஜராத் தேர்தல்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா அமோக வெற்றி!

குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

182 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த 1 ஆம் தேதி முதற்கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்லில், இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி அளவில் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டது முதல், ஆளும் பாஜகவே முன்னிலையில் இருந்தது. தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 150-க்கும் மேற்பட்ட இடங்களில், ஆளும் பாஜக வெற்றியுடன் கூடிய முன்னிலையில் இருக்கிறது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் பரிதாபமான நிலையில் தோல்வி அடைந்துள்ளது. வெறும் 16 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் காங்கிரஸ் சுமார் 62 இடங்களை கோட்டை விட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா மனைவி, ரிவாபா ஜடேஜா, வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் மூன்றாவது இடத்தில் பின்தங்கி இருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் அவர் முன்னிலை பெற்றார். வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆம் ஆத்மி வேட்பாளர் குர்முரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரிவாபா ஜடேஜா தோற்கடித்து உள்ளார்.

இதை அடுத்து, ஜாம்நகர் வடக்கு தொகுதியில், தனது கணவர் ரவீந்திர ஜடேஜா உடன் திறந்தவெளி வாகனத்தில் ரிவாபா ஜடேஜா பேரணியாகச் சென்றார். அப்போது தன்னை வெற்றி பெறச் செய்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான புதிய அரசு வரும் 12 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் பதவி ஏற்க உள்ளது. இந்த விழாவில் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.