சாதி பார்க்கும் ஓ.பன்னீர்செல்வம்?; தீப பிரச்சனையில் திருப்பம்!

கார்த்திகை தீபத்திருநாள் அன்று தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் தீபம் ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக

தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.

இதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெரியகுளம் கைலாசநாதர் கோவிலை தங்களது கோவிலாக நினைத்து ஓபிஎஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்றுகின்றனர்.

மகன் நடத்தி வரும் அன்பர் பணிக்குழுவிற்கு அரசு அங்கீகாரம் இல்லை. தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்ததால் அவரது அதிகாரத்தை கையில் எடுத்து தொட்டிய நாயக்கர் இன மக்களை கோவிலினுள் விடாமல் தடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு தான் அந்த இன மக்களுக்கு மரியாதை கொடுத்து தீபம் ஏற்ற அனுமதித்தோம். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா ஒரு கிரிமினல் குற்றவாளி. அந்த கோவில் பூசாரி தற்கொலைக்கு காரணம் ஓ.ராஜா என்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

அவரது பையனுக்கு திருப்பரங்குன்றம் ராஜபட்டர் பரிவட்டம் கட்டி அழைத்து வருகிறார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் அருகில் இருக்கிறார். அவருக்கு பரிவட்டம் கட்ட வேண்டுமா? கூடாதா? சமூக நீதி எங்கே?

இது அரசு கோவில். அதில் அவர்களது சொந்த கோயில் போல பல அதிகாரத்தை பயன்படுத்தி இந்த கோவிலை முழுமையாக கையகப்படுத்த நினைத்ததை நாங்கள் தடுத்தோம்.

ஓ.பன்னீர்செல்வம் மகன் கூறுவதை போல ரவுடிகளை கூட்டி வந்து இருந்தால் தீபத்தை நாங்களே ஏற்றி இருப்போம். அந்த குருக்கள் ஓ.பன்னீர் செல்வத்தின் குடும்பத்தினர் கொண்டு வரும் தீபத்தை ஏற்றுவதற்காக 15 நிமிடத்திற்கு மேல் காத்து இருந்தார்.

அந்த தீபத்தை நீங்கள் ஏற்றுங்கள் என்று குருக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் பலமுறை சொல்கிறார். அதை அவர் கேட்க மறுத்ததால் தான் சமூக நீதி மறுப்பு என நாங்கள் சொல்கிறோம்.

பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ சரவணகுமார், சரிசமமான சமூகத்தை சேர்ந்தவராக இருந்து இருந்தால் இது நடந்து இருக்குமா? அந்த கோவிலில் சமூக நீதி மறுக்கப்பட்டு இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார் முதல்வர். அவர் நிர்வகிக்கின்ற இந்த தமிழகத்தில் ஒரு சமூக நீதி மறுப்பு நிகழக்கூடாது என்பதால் தான் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறுகின்றோம்.

நிச்சயமாக அந்த கோவில் ஒரு குடும்பத்தின் கோவில் என இல்லாமல் பொதுக் கோவிலாக மாறும். பொதுமக்கள் தாராளமாக சென்று தரிசனம் செய்யும் நிலைமையை உருவாக்குவோம்.

திமுக ஆட்சி நடக்கிறது என்பதை மறந்து விட்டு, அரசு நிகழ்ச்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சடித்துள்ளனர். கோவில் பூசாரியின் வேஷ்டியை சட்டமன்ற உறுப்பினர் பிடித்து இழுத்ததாக கூறுவது தவறான செய்தி.

இந்த கோவிலின் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவரையும் பணி மாறுதல் செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் அந்த கோயிலுக்குள் வராமல் தடுக்க முடியும். இந்த கோரிக்கையும் ஆட்சியரின் முன்வைத்து உள்ளோம்.

அது தொடர்பாக உடனே மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க சொல்லி நானும், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமாரும் மனு கொடுத்து உள்ளோம்.

இந்த வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுப்போம் என, ஆட்சியர் உறுதி அளித்து இருக்கிறார். இவ்வாறு தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.