பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ.44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்

கராச்சி,

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால், பொதுமக்கள் தெருக்களில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

இலங்கையில் வன்முறை பரவிய நிலையில், அதிபர் நாட்டை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இதன்பின்னர், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் நிலைமை தணிந்துள்ளது. எனினும், எரிபொருள், உணவு பொருட்கள் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றில் இருந்து மக்கள் முழுமையாக மீளவில்லை.

இந்நிலையில், மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டில் நிலைமை மோசமடைந்து உள்ளது. அந்நாட்டில், சீனா, எகிப்து, தாய்லாந்து மற்றும் பிற நாடுகளில் இருந்து உள்நாட்டுக்கு தேவையான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

எனினும், கடந்த 3 நாட்களாக கராச்சி துறைமுகத்தில் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களான வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்ட பொருட்கள் தேங்கியுள்ளன.

பாகிஸ்தானில் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையாக உள்ளது. இதனால், கராச்சி துறைமுகத்தின் பல்வேறு முனையங்களில் இறக்குமதி செய்யப்பட்ட காய்கறி உள்ளிட்டவை தேங்கி இருக்கின்றன.

இவற்றின் மதிப்பு ரூ.44.47 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இறக்குமதி பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் ஏற்படும் காலதாமதம் அவற்றின் தினசரி விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்பதுடன், துறைமுக முனைய கட்டணம், இறக்குமதி கட்டணம் மற்றும் கன்டெய்னர்களுக்கான விலை உள்ளிட்டவையும் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரலில், நம்பிக்கை வாக்கெடுப்பின் வழியே பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டதில் இருந்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.