நரேந்திர மோடி பிரதமரான அடுத்த ஓராண்டில் குஜராத் பா.ஜ.க ஆட்சிக்கு பெரும் தலைவலியாக இருந்தவர் ஹர்திக் படேல். 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்துக்குப் பிறகு தேசிய ஊடகங்கள் குஜராத் பற்றி பேசியதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். அவர் முன்னெடுத்த பட்டிதர் சமூகத்துக்கான இட ஒதுக்கீடு பிரச்னை பேசுபொருளானது. இதன் விளைவாக அப்போதைய முதலமைச்சரான ஆனந்திபென் பட்டேல் தன் பதவியை ராஜினாமா செய்தார். இவ்வாறு பா.ஜ.க ஆட்சிக்குப் பெரும் குடைச்சல் கொடுத்தவரான ஹர்திக், தற்போது பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகியிருக்கிறார்.
குஜராத் மாநிலத்தில் ஓ.பி.சி சமூகங்களில் ஒன்றான பட்டிதர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் படேல். 2012-ம் ஆண்டு `சர்தார் படேல் குழு’ என்னும் ஓபி..சி பிரிவின் அமைப்பில் இணைந்தார் ஹர்திக் படேல். பிறகு 2015-ம் ஆண்டு அந்த அமைப்பிலிருந்து வெளியேறி ஓ.பி.சி மக்களுக்கான இட ஒதுக்கீடுக்கு மிகப்பெரிய பேரணியையும், போராட்டத்தையும் நடத்தினார். இதனால் குஜராத் மக்களிடையே ஹர்திக் பிரபலமடைந்தார். இந்த நிலையில், அரசியலில் ஈடுபட தொடங்கிய படேல் 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக காங்கிரஸில் பணியாற்றிய இவருக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸிலிருந்து விலகினார். அப்போது வெளிப்படையாக ஆம் ஆத்மி கட்சி இவருக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், அந்தக் கட்சியில் இணைய மறுத்த ஹர்திக், 5 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தார்.
இந்த நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தலில் விராம்காம் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக ஹர்திக் அந்தக் கட்சியின் தலைமையால் அறிவிக்கப்பட்டார். கடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றவரை காங்கிரஸ் மீண்டும் களத்தில் இறக்கியது. மறுபக்கம் ஆம் ஆத்மி அந்தத் தொகுதியின் செல்வாக்குமிக்க நபரை வேட்பாளராக அறிவித்தது. அதனால், ஹர்திக்கின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகவே இருந்தது.
சர்ச்சை கடந்த வெற்றி!
ஆனந்திபென் பதவி விலகல் குறித்துப் பேசிய ஹர்திக், “இட ஒதுக்கீடு போராட்டத்தின் காரணமாக மட்டும் அவர் விலகவில்லை. மாநிலம் முழுவதும் பரவி இருக்கும் ஊழல் காரணமாக அவர் விலகினார்” எனக் குற்றம்சாட்டினார். ஆனால், அதற்கு நேர் எதிராக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, “அனந்திபென் அமைச்சராக இருந்தபோது குஜராத் வளர்ச்சியை உறுதி செய்ததில் முக்கியமானவர்” எனத் தெரிவித்தார். இப்படியான முரண்பாடுகள் நிறைந்த கருத்துகளை தெரிவித்ததால் இவர்மீது விமர்சனம் இருந்தது. இவர் பதவிக்காக மட்டுமே இவ்வாறு பேசுவதாகக் கூறப்பட்டது.
“பா.ஜ.க ஆட்சிக்கு எதிராகப் போராடி பிரபலமானவர், அந்தக் கட்சியில் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெறுவாரா?” என பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
காங்கிரஸுக்கு எதிரான பிரசாரம்!
“10 ஆண்டுகளாக விராம்காம் தொகுதியைக் தன் வசம் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, மக்களுக்கான வளர்ச்சி பணிகளை எதுவும் செய்யவில்லை” என்னும் விமர்சனத்தை முன்வைத்தார் ஹர்திக். தொகுதியில் காங்கிரஸ் கட்சி செய்ய தவறியதை சுட்டிக்காட்டி, பிரசாரம் செய்த ஹர்திக்குக்கு இந்தத் தேர்தலில் நல்ல மைலேஜ் கிடைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
சர்ச்சைகள் தன்னை சுழன்றடித்தபோதும், எப்படி குஜராத் வளர்ச்சியைக் கையில் எடுத்து பா.ஜ.க தலைமை தேர்தலைச் சந்தித்ததோ… அதே போல் விராம்காம் வளர்ச்சி என்னும் பெயரில் 51,555 வாக்குகள் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஹர்திக் படேல். இந்தத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் 47,072 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் 42,412 பெற்றிருக்கின்றனர்.