நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உலவி வந்த மக்னா யானை ஒன்று (தந்தம் இல்லாத ஆண் யானை) குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட தானியங்களை உட்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தது. கடந்த 10 மாதங்களில் சுமார் 50 குடியிருப்புகளை சேதப்படுத்தியது. இந்த பந்தலூர் மக்னா யானையை பி.எம் – 2 என பெயரிட்டு கண்காணித்து வந்தனர்.

கடந்த மாதம் தேவாலா பகுதியில் ஒரு வீட்டை உடைத்து பாப்பாத்தி என்ற பெண்ணைத் தாக்கி கொன்றது. இந்த யானையைப் பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி வந்த மக்னாவைப் பிடித்து முதுமலை அடர் வனத்துக்குள் விடுவிக்க வனத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து மக்னாவை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். ட்ரோன் கேமிரா உதவியுடன் மக்னா யானையை பின்தொடர்ந்தனர். இந்த யானை உலவிய வனப்பகுதியில் கடந்த வாரம் கல்யாணி என்ற பெண் யானை தாக்கி உயிரிழந்து கிடந்தார். யானையைப் பிடிக்கும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் தேவாலா அரசு தேயிலை தோட்டத்தில் மோகனதாஸ் என்ற நபரை அந்த யானை தாக்கியதில் அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.

அருகில் உள்ள புலியம்பாறை பகுதியில் மக்னா யானை உலாவுவதை வனத்துறையினர் உறுதி செய்தனர். கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். அரை மயக்கத்தில் இருந்த மக்னாவை கும்கி யானைகள் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வந்தனர். யானையின் உடல்நிலையை பரிசோதனை செய்து முதுமலை அடர் வனத்துக்குள் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.