பிரதமர் மோடி குறித்து ஃபேக் நியூஸ் – திரிணாமுல் நிர்வாகி சாகேத் கோகலேவுக்கு ஜாமின்

பிரதமர் நரேந்திர மோடி மோர்பி வருகை பயணச் செலவு குறித்து போலி செய்தி வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேவுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் மச்சு ஆற்றின் குறுக்கே கேபிள் பாலம் இருந்தது. இந்த தொங்கு பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, மோர்பி பாலம் அறுந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது. அப்போது பாலத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில், சுமார் 135 பேர் ஆற்றுக்குள் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மோர்பி பால விபத்தில் காயம் அடைந்தவர்களை, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் மாதம் 1 ஆம் தேதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில், மோர்பி தொங்கு பாலம் விபத்தை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி வருகைக்காக, குஜராத் மாநில அரசு 30 கோடி ரூபாய் செலவு செய்ததாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்ததாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே செய்தி வெளியிட்டார்.

இந்தத் தகவலை, பிரஸ் இன்பர்மேஷன் பீரோவின் (பி.ஐ.பி) உண்மை கண்டறியும் குழு ஆராய்ந்ததில், இந்த தகவல் போலியானது என்றும், ஆர்.டி.ஐ இது போன்ற எந்த தகவலும் அளிக்கவில்லை என்றும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து, போலி செய்தி பரப்பிய புகாரின் அடிப்படையில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலேவை, ஜெய்ப்பூரில் குஜராத் மாநில போலீசார் அண்மையில் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி, திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே தரப்பில், அமகதாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்தத் தகவலை, திரிணாமுல் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டெரக் ஓ பிரையன் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.