புதுச்சேரி: புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச ரெயின் கோட் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘‘முன்னாள் முதல்வர் நாராயணசாமி இந்த அரசு செய்கின்ற நலத்திட்டங்களை பார்த்து வயிற்றெரிச்சலில் பேசி கொண்டிருக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் என்ன திட்டங்களை செயல்படுத்தினார். இப்போது என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது புதுச்சேரி மாநில மக்களுக்கு நன்றாக தெரியும. அவர் அரசியலில் இருப்பதை காட்டிக்கொள்ளவும், காங்கிரஸ் கட்சியில், கூட்டணியில் இருக்கின்ற பிரச்சனைகளை மறைப்பதற்காகவும், ஆளுங்கட்சியின் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
நாங்கள் போராட்டம் செய்வதால்தான், வேண்டியது கிடைக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க இதுபோன்ற போராட்டங்களை செய்கின்றனர். மாணவர்களுக்கு இலவச பேருந்து, மதிய உணவோடு இரண்டு முட்டை கொடுக்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளுக்கும் ரெயின்கோட் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.
அதேபோன்று வெகு விரைவாக சீருடை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாராயணசாமி முதல்வராக இருந்தபோது எத்தனை பேருக்கு சீருடை, சைக்கிள் கொடுத்துள்ளார் என்று சொல்ல சொல்லுங்கள். அனைத்து திட்டத்தையும் நிறுத்திவிட்டு சென்றவர் தான் அவர்.
அவருடைய ஆட்சிக் காலத்தில் எல்லாவற்றையும் சிறப்பாக செய்திருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியதுதானே. ஏன்? அவர் தேர்தலில் போட்டியிடாமல் பயந்து ஓடினார். அதற்கான காரணம் என்ன? அவருடைய ஆட்சி காலத்தில் எதையுமே அவர் செய்யவில்லை. அதனால், மக்கள் அவருக்கு வாக்கு அளிக்க மாட்டார்கள் என்று தெரிந்துதான் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
ஆகவேதான் இந்த அரசின் மீது தேவையற்ற பழியை சுமர்த்துவதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். கல்வித்துறையில் பல மாற்றங்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்து வருகிறோம். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவர், நான் என்னுடைய சொந்த வேலையை பார்ப்பதாக என்மீது குற்றச்சாட்டு சொல்கிறார்.
நாராயணசாமி தன்னுடைய ஆட்சியில் என்ன சாதனை புரிந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் புதுச்சேரி மாநிலத்தை 10 ஆண்டு காலம் பின்னோக்கி கொண்டு சென்ற ஒரே முதல்வர் யார் என்றால் நாராயணசாமிதான். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வராததற்கு காரணம் நாராயணசாமியின் தவறான அணுகுமுறை, செயல்பாடு, நிர்வாகத் திறனின்மைதான்.
தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆட்சி காலத்தில் என்னென்ன திட்டங்கள் நிறுத்தப்பட்டிருந்ததோ, அந்த திட்டத்தையெல்லாம் மீண்டும் ஆரம்பித்து செயல்படுத்தி வருகிறோம். இலவச லேப்டாப், சைக்கிள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான கோப்பு தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு சென்றுள்ளது. போராட்டம் செய்வது நாராயணசாமிக்கு கைவந்த கலை. ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் போராட்டம் செய்வார்’’என்றார்.
அப்போது கூட்டுறவு சர்க்கரை ஆலை எப்போது இயக்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் நமச்சிவாயம், ‘‘கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குவதற்கான நடவடிக்கையை தொடர்ந்து இந்த அரசு எடுத்து வருகிறது. வெகு விரைவில் பொதுமக்கள், விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப நடத்த இருக்கிறோம். விரைவில் இயக்குவோம். ரூ.13 கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி முதல்வரையும், என்னையும் கரும்பு விவசாயிகள் பலமுறை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். வெகு விரைவில் அந்த நிதியை கொடுப்போம்’’ என்று தெரிவித்தார்.