மாண்டஸ் புயல் எச்சரிக்கையை அடுத்து கடலோரப் பகுதிகளில் சார் ஆட்சியர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மதுக்கூர் பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் மௌலானா தோப்பில் இந்து காட்டு நாயக்கன் பழங்குடி சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீட்டுமனை பட்டா ஜாதி சான்றிதழ் முதல்வர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என அந்த சமுதாயத்தைச் சேர்ந்த மதுக்கூர் பேரூராட்சி பத்தாவது வார்டு உறுப்பினர் கோமதி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று இன்று அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 114 பேருக்குஜாதி சான்றிதழ், 39 நபர்களுக்கு நல வாரிய அட்டை, 45 நபர்களுக்கு முதலமைச்சரின் காப்பீடு திட்டம் என சுமார் 200க்கும் மேற்பட்ட மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு வீடாக சென்று வழங்கினார்.
மாவட்ட ஆட்சித் தலைவருடன் சார் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதாக கூறினார்.
மாண்டோஸ் புயல் பற்றி பேசிய அவர், மாண்டோஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளுக்கு சார் ஆட்சியர்கள் தலைமையில் அரசு அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் இன்று இரவு அல்லது நாளை காலை முதல் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார். மேலும் காற்று வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்த அவர், எந்த சூழலிலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருந்தது. இந்நிலையில், அது நேற்றிரவு 11.30 மணியளவில் மான்டோஸ் புயலாக வலுவடைந்தது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மான்டோஸ் புயல் காரணமாக வரும் 10ஆம் தேதிவரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.