மெடிக்கல் ஷாப்பை சூறையாடும் நபர்கள்! அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்!

கோவையில் கடையின் உரிமையாளருக்கும் வாடகைக்கு இருந்து மெடிக்கல் ஷாப் நடத்தி வருபவருக்கும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் மெடிக்கல் ஷாப் பொருட்களை அதிகாலையில் சூறையாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி பகுதியை சேர்ந்தவர் மெடிக்கல் நாராயணன். இவர் அதிமுகவின் இளைஞரணியில் உள்ளார். இவர் அதே பகுதியில் பேரூர் சாலை அருகே மணி மருந்தகம் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மருந்து கடை நடத்தி வருகிறார்.

வாடகை கட்டிடத்தில் மருந்தகம் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட உரிமையாளரான தண்டபாணி, மாரியப்பன் என்பவருக்கு கட்டிடத்தை விற்பனை செய்கிறார். இது நாராயணனுக்கு பிடிக்கவில்லை. தானே வாங்கிக் கொள்வதாக இருந்த நிலையில் விற்பனை செய்ததால், கட்டிடத்தை காலி செய்ய மறுத்துள்ளார். இதையடுத்து கட்டிட உரிமையாளர் மாரியப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பேரில் வாடகை பணத்தை நாராயணன் நீதிமன்றம் மூலம் செலுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் மாரியப்பன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

இதனிடையே இன்று அதிகாலை மருந்தகத்திற்கு வந்த இருபதுக்கும் மேற்பட்டோர் மருந்தகத்தை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை சூறையாடி ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் கடையின் பெயர் பலகையையும் கருப்பு நிற வர்ணம் பூசி அழித்துள்ளனர்.இது குறித்து காலையில் தகவலறிந்த நாராயணன் உடனடியாக செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.மேலும் வியாபாரிகள் சங்கத்திலும் அளித்த தகவலின் பேரில் வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தில் திரண்டனர்.

அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்டிகளை கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மருந்தகத்தை சூறையாடியது கட்டிட உரிமையாளர் மாரியப்பனின் மருமகன் கௌதம் மற்றும் சிலர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மெடிக்கல் பொருட்களை அதிகாலை காலி செய்து வாகனத்தில் ஏற்றும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.