நாட்டு மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தலில், பா.ஜ.க வெற்றிபெரும் என்ற கருத்துகணிப்பு முடிவுகளுக்கும் ஒருபடி மேலாக, பா.ஜ.க ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்யப் போகிறது. காலையில் தொடங்கப்பட்டு நடைபெற்றுவரும் வாக்கு எண்ணிக்கையில், மாலை 6 மணி நிலவரப்படி 150 இடங்களில் வெற்றி, 6 இடங்களில் முன்னிலை என மொத்தம் 156 இடங்களை பா.ஜ.க கைப்பற்றவிருக்கிறது. இது குஜராத் அரசியலில் எந்தவொரு கட்சியும் பெற்றிராத வெற்றியாக அமையவிருக்கிறது.
இதில் பா.ஜ.க-வுக்கு மாபெரும் வெற்றி, காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்குமளவுக்கான படுதோல்வி என்ற வரிசையில், மூன்றாவது அணியாக தனித்து களமிறங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மொத்தம் 5 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பஞ்சாப் மாடல் மூலம் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பளர் இசுதன் காத்வி கூட, பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியுற்றார். ஒப்பீட்டளவில், ஆம் ஆத்மிக்கும் இது பெரிய தோல்வி என்றாலும்கூட, இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றே ஆம் ஆத்மி தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில், ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதில், “ஆம் ஆத்மிக்கு உதவிய மக்களுக்கு நன்றி. குஜராத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. இன்று ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக மாறியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சியாக இருந்தது. இப்போது அதே 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டு மாநிலங்களில் ஆட்சி மற்றும் தேசிய கட்சியாக மாறியிருக்கிறது” என்று கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
ஒரு கட்சி தேசிய கட்சியாக இருக்கவேண்டுமெனில், குறைந்தது 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். இப்போது இரண்டு மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில், குஜராத் தேர்தலால் அந்தக் கட்சி தற்போது தேசியக் கட்சியாக உயர்ந்திருக்கிறது.