அடுத்த புயல் எப்போது? அரபிக் கடலில் ரெடியாகும் சக்கரம்… சம்பவத்திற்கு தமிழ்நாடு வெயிட்டிங்!

மாண்டஸ் புயல் ஒருவழியாக கரையை கடந்துவிட்டது. தீவிர புயலாக இருந்து படிப்படியாக வலு குறைந்து மாமல்லபுரம் வழியாக நுழைந்து அரபிக் கடலில் நோக்கி சென்று விட்டது. இதன் தாக்கம் இன்னும் குறையவில்லை. அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய
கனமழை
தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் என்றாலே அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் என்பது இயல்பான ஒன்று.

அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அந்த வகையில் மாண்டஸ் புயலை தொடர்ந்து அடுத்த புயல் எப்போது உருவாகப் போகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஸ்கைமெட் வெதர் என்ற தனியார் வானிலை இணையதளத்தின் வானிலை நிபுணர் மகேஷ் பாலவாட் கூறுகையில், வரும் 13ஆம் தேதி தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

புயலாக உருமாறுமா?

இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். ஆனால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாற வாய்ப்பில்லை. இருப்பினும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதன்மூலம் இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் ஒரு பெருமழைக்கு தமிழகம் தயாராக வேண்டும் என்று தெரியவருகிறது.

விடாத கனமழை

முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் பரவலானது முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பதிவில், மாண்டஸ் புயல் அரபிக் கடலை நோக்கி சென்றுவிட்ட போதிலும் கிழக்கு நோக்கிய காற்றை முடுக்கி விட்டுள்ளது.

டிசம்பர் 16ஆம் தேதி

எனவே வரும் நாட்கள் மிகவும் சாதகமான ஒன்றாக இருக்கும். இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும். சில வானிலை மாடல்கள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 16ஆம் தேதி உருவாகும். இது படிப்படியாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளன.

சீக்கிரமே வலுவிழக்கும்

சில வானிலை மாடல்கள் காற்றழுத்த தாழ்வு பகுதி வெகு சீக்கிரமே வலுவிழந்து விடும் எனவும் கூறியுள்ளன. இருப்பினும் காத்திருப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். மாண்டஸ் புயல் கரையை கடந்து விட்டாலும் அதன் தாக்கம் குறித்த பேச்சு இன்னும் அடங்கவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 11 செ.மீ மழை பெய்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.