தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், வங்கக்கடலில் உருவாகி மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையை கடந்து சென்றுவிட்டது. இதனால் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் ஆனது தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக மழையை அளிக்கும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நல்ல மழை பெய்யும்.
இன்றும், நாளையும்
கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் மேற்கத்திய மேகங்கள் காணப்படும். இதனால் கனமழை பெய்யும். கேரள கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களான நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வடக்கு உட்புற மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வறண்ட வானிலை
மேற்கத்திய காற்றின் காரணமாக தூத்துக்குடியில் வறண்ட வானிலை நிலவும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பது தெரியவருகிறது. இந்த நாட்களில் மழையின் தீவிரத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடவும் வாய்ப்புள்ளது. நடப்பு வாரத்தில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன.
அரையாண்டு விடுமுறை
இரண்டு வாரங்கள் தேர்வு நடத்தப்பட்டு டிசம்பர் 24ஆம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை விட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு புத்தாண்டு பிறந்து ஜனவரி 2, 2023ல் தான் பள்ளிகள் திறக்கப்படும். விடுமுறை நாட்களில் புயல் உருவாகி கனமழை கொட்டித் தீர்த்தால் எந்தவித பிரச்சினையும் இருக்காது. அதுவே அரையாண்டு தேர்வு நடைபெறும் அடுத்த இரண்டு வாரங்கள் மழை பெய்தால் சிக்கலாகிவிடும்.
பரவலான மழை
ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்துவதும் சரியாக இருக்காது. இதனால் தேர்வுகள் தள்ளிப் போக வாய்ப்புண்டு. Chennai Rains என்ற தனியார் வானிலை வலைதளத்தில் வட கடலோர தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்யும். உட்பகுதிகளில் பரவலான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 13ஆம் தேதி வரை
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்றைய தினம் (டிசம்பர் 11) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.