`அப்போ இப்போ – 10: பாலச்சந்தர் சாருடன் இருந்ததால மட்டும்தான் என்னை மதிச்சாங்க!' – கவிதாலயா கிருஷ்ணன்

` ஓர் பழமையான பழைய வீடு எப்படி இருக்கும்? சுவர்களை பெயர்த்துக் கொண்டு ஒழுகும் நீர் கூட அந்த வீட்டின் முந்தைய காலத்தை சட்டென கண் முன் நிறுத்திவிடும். அப்படித்தான் 100 ஆண்டுகள் பழமையான வீட்டிற்குள் நுழைந்தேன். அந்த வீடு பல கலைஞர்களை பார்த்திருக்கிறது.

அந்த வீட்டினுள் நாடகம் கூட போட்டிருக்கிறார்கள். அந்த காலத்து பொருட்கள் அருங்காட்சியகத்தில் இருப்பது போல வீட்டின் முற்றத்தில் இரும்பினாலான பணப்பெட்டி ஒன்று பொக்கிஷமாய் பழைய நினைவுகளை சுமந்து நின்றது. அந்த வீட்டினைச் சுற்றியும் அவரும், அவருக்குப் பிடித்தமானவர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், அவர் வாங்கிய விருதுகளும் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தன. யார் அவர்? யார் வீடு? என்கிறீர்களா… நாடகம், சினிமா, சீரியல் என எந்தத் தளத்திலும் இவரை பார்த்திருக்காமல் நிச்சயம் உங்களால் இருந்திருக்க முடியாது. அவர்தான் `கவிதாலயா கிருஷ்ணன்’.

விகடன் `அப்போ இப்போ’ தொடருக்காக அவரை சந்தித்துப் பேசினோம். எப்படி ஒரு புகைப்படம் நம்மை அந்தக் காலத்துக்கு கொண்டு செல்லுமோ அதே போல அவர் கடந்து வந்த பாதையை ஒரு சீன் கூட மாறாமல் நம் கண் முன் நிறுத்தினார்.

`கவிதாலயா கிருஷ்ணன்’

` நான் என்னைக்குமே என்னை நடிகன்னு சொல்லிக்கிட்டதேயில்லை. சிவாஜி கணேசன் சார் நடிகர். அவருக்குப் பிறகு கமல்ஹாசன் நடிகர். அவங்க ரெண்டு பேரையும் தவிர நான் யாரையும் நடிகன்னு சொல்லவே மாட்டேன். மத்தவங்களுக்கெல்லாம் இது தொழில். என்னைப் பொறுத்தவரைக்கும் நடிகன்னா அவங்க ரெண்டு பேர் மட்டும்தான்! என்றவரிடம், `நீங்க சிவாஜி கணேசனின் வெறியன்’னு சொல்லியிருக்கீங்க… ஆனா, அவருக்குப் பிறகு கமல்ஹாசனை குறிப்பிட்டீங்க. ஏன் கமல்ஹாசனைப் பிடிக்கும்’ எனக் கேட்டோம்.

சிவாஜி கணேசனை ரெண்டு முறை அவர் வீட்டிலேயே போய் சந்திச்சிருக்கேன். அவர் பெரிய லெஜண்ட். அவரை பர்சனலா தெரியாது. ஆனா, கமல் சாரை எனக்குப் பர்சனலா தெரியும். 20 வயசில இருந்து அவரைப் பார்த்துட்டு இருக்கேன். சினிமாவுக்காக அவர் கொடுத்த கான்ட்ரிபியூஷன் இதுவரைக்கும் இந்தியாவில் யாரும் பண்ணதில்லை. அவர்தான் கம்ப்ளீட் நடிகர். அவருக்கு எல்லாமே தெரியும். சினிமாவில் அவருக்குத் தெரியாத விஷயமே கிடையாது. பிரிட்டிஷ் வரலாறெல்லாம் படிப்பார். எதுக்கு இதெல்லாம் படிக்கிறீங்கன்னு கேட்டா, `இல்ல கிருஷ்ணன்.. ராஜாக்கள் எல்லாம் அந்த ஹெவியான உடைகள் அணிந்துட்டு எப்படி இருந்திருப்பாங்கன்னு யோசிச்சு பாருங்க… அந்த ஹெவினஸ் எப்படி இருக்கும்னு தெரியுமா?’ன்னு சொன்னார். அந்த ஹெவினஸ் எப்படி இருக்குங்கிறதை எக்ஸ்ப்ளோர் பண்ணி பார்க்கிறதுக்காகவே மருதநாயகம் நேரத்தில் அதெல்லாம் அவர் போட்டுக்கிட்டாராம். ரொம்ப அனுபவிச்சு நடிப்பார். எப்பவும் அவருக்கு சினிமா, சினிமா மட்டும்தான்! இந்திய சினிமாவின் பொக்கிஷம் அவர்! 

`கவிதாலயா கிருஷ்ணன்’

கேபி சாருடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைச்சதெல்லாம் மிகப் பெரிய கொடுப்பினை. அவர் குடும்பத்தில் நானும் ஒருவன். என் குடும்பத்தில் அவரும் ஒருவர்! பர்சனலா எங்களுக்குள்ள நல்ல உறவு இருந்துச்சு. நானும், பாலச்சந்தர் சாரும் குளோஸா இருக்கோம்னுதான் ரஜினி சாரும் சரி, கமல் சாரும் சரி என்னை மதிச்சாங்க. நாகேஷ் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் என்கிட்ட உன்னைப் பார்த்தா கேபியைப் பார்க்க வேண்டாம்னு சொல்லுவார். போன ஜென்ம புண்ணியம்தான் அது! எங்க ஃபேமிலியில் யாரும் சினிமா கிடையாது. நான் இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஒரு கம்பெனியில் வேலைக்கு போயிட்டு இருந்தேன். அப்ப தான் கேபி சார், டிராமா எல்லாம் அறிமுகமாச்சு. கேபி சார் சீரியலுக்கு முதன்முதலா கூப்பிட்டப்பவும் முடியாதுன்னுதான் சொன்னேன். லீவு நாளில் நீ வந்து நடிச்சா போதும்னு சொல்லி சீரியலிலும் என்னை நடிக்க வச்சார். `மர்மதேசம்’ சீரியலில் நடிக்கும்போதெல்லாம் அடுத்தக் கட்டம் என்னன்னு கேட்க ஆபிஸ்ல கூட்டம் கூடிடுவாங்க. அந்த அளவுக்கு ரீச் கொடுத்துச்சு.

அந்த காலத்திலெல்லாம் தினமும் டிராமா போடுவோம். டெலிவிஷன் வந்ததும் எல்லாரையும் சோம்பேறி ஆக்கிடுச்சுன்னுதான் சொல்லணும். இப்ப புதுப்புது டிராமா ட்ரூப் வந்திருக்காங்க. ஆர்வமா டிராமா போடுறாங்க. கூட்டமும் கூடுது. ஆனா, அந்த டிராமாவை ஃப்ரீயா போட்டீங்கன்னா மட்டும்தான் பார்க்கிறாங்க. டிக்கெட் காசு கொடுத்து யாரும் வாங்க தயாரா இல்லை. 500 ரூபாய் கொடுத்து படம் பார்க்கத் தயாரா இருக்கிறவங்க 50 ரூபாய் கொடுத்து ஏன் டிராமா பார்க்க மாட்டேன்றாங்கங்கிறதுதான் தெரியல. முன்னாடி, டிராமாவில் நடிச்சா மட்டும்தான் சினிமாவில் ஒரு அங்கீகாரம், மரியாதை எல்லாம் கிடைக்கும். ஸ்டேஜ், கேமரா பயமெல்லாம் இருக்காதுன்னு சொல்லுவாங்க. 

`கவிதாலயா கிருஷ்ணன்’

டெலிவிஷனில் நடிச்சா இப்போதெல்லாம் சினிமாவில் வாய்ப்பு அமையாது. டிவி ஆர்ட்டிஸ்ட் எல்லாம் வேண்டாம்னு ஓப்பனாகவே சொல்லிடுறாங்க. அது ஏன்னு தெரியல. ஜனங்க இன்னும் டிவியை ஒரு மீடியமாகவே எடுக்கலைங்கிறது நல்லாவே புரியுது. டெலிவிஷன் சீரியல் எப்பவுமே மக்கள் மனசுல பதியுறது இல்ல. தொடர்ந்து சீரியல் பார்க்கிறதாகச் சொல்லுவாங்க. என்ன கதைன்னு கேட்டா அவங்களுக்கு சட்டென சொல்லத் தெரியாது. அது ஒரு கதைங்க நீங்க வருவீங்க தானேன்னு சொல்லுவாங்க. இப்பவும் ஆஃபர்ஸ் வருது. நான் வெளியூர் போக மாட்டேன். அப்படி போனா ரெண்டு, மூணு நாளிலேயே ஹோம் சிக் ஆகிடுவேன். `கபாலி’ படத்தில் நடிக்கிறதுக்காக மலேஷியா வரச் சொன்னாங்க. என்னால வீட்டை விட்டுட்டெல்லாம் இருக்க முடியாதுங்கிறதனால வேண்டாம்னு சொல்லிட்டேன் என்றவரிடம் கார்கி படம் குறித்துக் கேட்டோம்.

கெளதம் ஒருநாள் வீட்டுக்கு வந்தார். அந்தப் படத்தோட கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் ஷூட் பண்ணாம இருந்தார். அவர் அசிஸ்டென்ட் எல்லாம் நான் அந்தக் கேரக்டருக்கு செட் ஆக மாட்டேன்னு சொல்லியிருக்காங்க. அவர் காமெடி தான் சார் பண்ணுவார்னும் சொல்லியிருக்காங்க. அப்புறம் ஏன் என்னை செலக்ட் பண்ணீங்கன்னு கேட்டேன். நான் உங்ககிட்ட ஃபோன்ல பேசுனப்ப நீங்க ஆங்கிலத்தில் அழகா பேசுனீங்க சார்.. நீங்க தான் அந்த அரசு வழக்கறிஞர் ரோலுக்கு செட்டாவீங்கன்னு எனக்கு கட் ஃபீலிங் இருந்துச்சுன்னு சொன்னார். மூணு நாள் தான் அந்தப் படத்தோட ஷூட்டிங் போச்சு. ஷூட் முடியுற நேரம் கெளதம்கிட்ட சாய்பல்லவி கூட நடிக்கிறதாக சொன்னீங்க அவங்க வரவே இல்லையேன்னு கேட்டேன். மறுநாள் அவர் சொல்லி அவங்க கிளம்பி வந்து என்னை மீட் பண்ணினாங்க. நாங்க ஃபோட்டோஸ் எல்லாம் எடுத்துக்கிட்டோம். அவங்ககிட்ட, `உங்களை ரொம்ப அட்மயர் பண்றேன்னு சொன்னேன். யூஎஸ், டாக்டர் பின்னணியாக இருந்தாலும் சினிமா பிடிச்சிருக்குன்னு ரொம்ப இறங்கி பண்றீங்க!’ன்னு சொன்னேன் என்றவரிடம் அடுத்தடுத்த புராஜக்ட் குறித்துக் கேட்டோம்

`கவிதாலயா கிருஷ்ணன்’

தொடர்ந்து ஆஃபர்ஸ் வருது. ஓடிடிக்காக பேசிட்டு இருக்கேன். இப்ப சமீபத்தில்தான் ரோஜா சீரியல் முடிஞ்சது. படங்களும் பேசிட்டு இருக்கேன். தொடர்ந்து சந்திப்போம்!’ என்றார்.

இன்னும் பல விஷயங்கள் குறித்து `கவிதாலயா கிருஷ்ணன்’ நம்மிடையே பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்! 

படங்கள் – விக்னேஷ். C

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.