மகாராஷ்டிரா உயர் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சந்திரகாந்த் பாட்டீல். இவர் அவுரங்காபாத் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசும்போது பாபாசாஹேப் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். “அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே ஆகியோர் பள்ளி தொடங்கியபோது அரசை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் மக்களிடம் சென்று `நான் பள்ளி தொடங்குகிறேன், தயவு செய்து பணம் கொடுங்கள்’ என்று பிச்சை எடுத்து பள்ளியை நடத்தினர்” என்று தெரிவித்திருந்தார். சந்திரகாந்த் பாட்டீல் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனே பாட்டீல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடந்தது.
இதையடுத்து சந்திரகாந்த் பாட்டீல் தனது கருத்தை திரித்து கூறிவிட்டனர் என்றும், நல்ல நோக்கத்திற்காக ஒவ்வொரு வீடாகச் சென்று நன்கொடை பெற்றதைத்தான்தான் அப்படி தெரிவித்ததாகவும், தவறாக கூறவில்லை என்றும் தெரிவித்தார். சந்திரகாந்த் பாட்டீல் கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சந்திரகாந்த் பாட்டீல் புனேயில் உள்ள சிஞ்ச்வாட்டில் முன்னாள் கவுன்சிலர் வீட்டிற்கு வந்திருந்தார். ஏற்கெனவே அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பா.ஜ.க தொண்டர்களும் அதிக அளவில் குவிந்திருந்தனர். ஆனாலும் சந்திரகாந்த் பாட்டீல் முன்னாள் கவுன்சிலரை சந்தித்துவிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்தபோது ஒருவர் ஓடிவந்து அமைச்சரின் முகத்தில் மையை தெளித்தார். அவருடன் இருந்தவர்கள் அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். சந்திரகாந்த் பாட்டீல் முகத்தில் மை வீசப்பட்டது தொடர்பாக 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சந்திரகாந்த் பாட்டீல் அளித்திருந்த பேட்டியில், “தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். எனது கருத்துக்கு விளக்கம் கொடுத்துவிட்டேன்” என்று குறிப்பிட்டார். துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்த கருத்தின் பொருளை மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஜோதிபா புலே, அம்பேத்கர் ஆகியோர் பள்ளி நடத்த அரசிடம் நிதி எதிர்பார்க்கவில்லை என்ற அர்த்தத்தில்தான் சந்திரகாந்த் பாட்டீல் பேசினார்” என்று தெரிவித்தார்.