இமாச்சலப் பிரதேச முதல்வராக பதவியேற்றார் சுக்விந்தர் சிங் சுகு!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 40 தொகுதிகளில்
காங்கிரஸ்
வெற்றி பெற்றது. பாஜக 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சி, 19 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றது. இதையடுத்து, முதலமைச்சர் பதவியை பாஜகவின் ஜெய்ராம் தாகூர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து, பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், சலசலப்புகள் ஏற்பட்டதால் இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ரேஸில் பிரதிபா சிங், சுக்விந்தர் சிங் சுகு மற்றும் முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அக்கட்சியின் மேலிடத்தால் நியமிக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக, நடைபெற்ற இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவை முதல்வராகவும், முகேஷ் அக்ன்ஹோத்ரியை துணை முதல்வராகவும் தேர்ந்தெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. பிரதிபா சிங் போட்டியில் இருந்து வெளியேறினார். மறைந்த தனது கணவர் விர்பாத்ரா சிங் பெயரைச் சொல்லி தான் இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக பிரதிபா சிங் தெரிவித்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 40 எம்எல்ஏக்களின் ஆதரவு பிரதிபா சிங்கிற்கு இல்லாததே, முதல்வர் போட்டியில் இருந்து அவர் வெளியேறுவதற்கு காரணம் என தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, இமாச்சலப் பிரதேச சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு செய்யப்பட்டு, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதம் ஆளுநரிடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இமாச்சலில் ஆட்சியமைக்க சுக்விந்தர் சிங் சுகுவுக்கு ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேச தலைநகர் சிம்லாவில் அம்மாநில முதலமைச்சராக காங்கிரஸின் சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு விழாவீல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்திஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் சொந்த கிராமமான பாப்ரியன் கிராமத்தினர் கூறுகையில்,“இதற்கு முன் எங்கள் கிராமத்தைப் பற்றி யாருக்கும் தெரியாது. இது எங்களுக்கு பெருமையான தருணம். சுக்விந்தர் சிங் சுகு இமாச்சல பிரதேசத்தின் முதல்வராகி விட்டார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் நிச்சயம் பாடுபடுவார்.” என நம்பிக்கை தெரிவித்தனர்.

பிரியங்கா காந்தி கூறுகையில், “தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம்.” என்றார். அதேபோல், முதல் அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும். எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்றார்கள், ஆனால் இன்று பாஜகவை நிறுத்திவிட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.