இரவு 11 மணிக்குப் பிறகு சாலையில் நடந்து சென்ற தம்பதி; ரூ.1,000 அபராதம் விதித்த போலீஸ் -என்ன நடந்தது?

கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு, மாணவிகள் புர்கா அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வர தடைவிதித்திருக்கிறது. அடுத்து காதல் ஜிஹாத், பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்போவதாகவும் கூறிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பெங்களூரு நகரில் கார்த்திக் என்பவர் தன் மனைவியுடன் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்குச் சென்றுவிட்டு இரவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் சாலையில் நடந்து சென்றபோது இரவு 12:30 மணியாகி இருந்தது. அப்போது அவர்களை போலீஸார் மடக்கி இரவு 11 மணிக்கு பிறகு சாலையில் நடந்து சென்றதற்காக ரூ.1000 அபராதம் விதித்துள்ளனர்.

இது தொடர்பாக கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில், “நானும் என் மனைவியும் பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்குச் சென்றுவிட்டு, திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்” என்றும் , “நானும் என்னுடைய மனைவியும் பிறந்தநாள் பார்ட்டிக்குச் சென்றுவிட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். எங்களது வீட்டிற்கு அருகில் சென்றுவிட்டோம். அந்நேரம் போலீஸார் எங்களை மடக்கி அடையாள அட்டையை காட்டும்படி கேட்டனர். நாங்களும் அடையாள அட்டையை காட்டினோம்.

போலீஸ்

அதோடு ஏன் அடையாள அட்டையை காட்டவேண்டுமென்று கேட்டோம். போலீஸார் எங்களின் மொபைல் போனை பிடுங்கிக்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு ஒரு போலீஸ்காரர் சலானில் எங்களின் பெயர் மற்றும் ஆதார் கார்டு விவரங்களை எழுதினார். ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டோம். உடனே ஒரு போலீஸ்காரர் இரவு 11 மணிக்கு பிறகு சாலையில் நடந்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

உடனே இரவு நேரமாகிவிட்டதால் போலீஸாருடன் மோதல் போக்கை விரும்பாமல் எங்களுக்கு விதி தெரியாது என்பதால் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்காமல் 3 ஆயிரம் ரூபாய் கேட்டனர். எங்களை விட்டுவிடும்படி கெஞ்சிக்கேட்டுக்கொண்டோம். ஆனால் அவர்கள் விடவேயில்லை. பணத்தை கொடுக்கவில்லையெனில் கைதுசெய்வோம் என்று போலீஸார் மிரட்டினர். நாங்களும் தொடர்ந்து கெஞ்சிக்கொண்டிருந்தோம். என் மனைவி அழுதுவிட்டார்.

அபராதம்

உடனே ஒரு போலீஸ்காரர் பிரச்னையை பெரிதாக்காமல் இருக்க என்னிடம் குறைந்தபட்ச தொகையை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். உடனே நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தெரிவித்தோம். அவர்கள் அந்தப் பணத்தை பேடிஎம் மூலம் கொடுக்கும்படி கேட்டு வாங்கிக்கொண்டனர். அதன் பிறகு எங்களை எச்சரித்து அனுப்பினர். சம்பந்தப்பட்ட போலீஸார்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பெங்களூரு துணை போலீஸ் கமிஷனர் அனூப் ஷெட்டி, சம்பந்தப்பட்ட போலீஸார் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது போன்ற அனுபவம் வேறு யாருக்காவது ஏற்பட்டு இருந்தால் உடனே அது குறித்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.