பெங்களூர்: கன்னட சினிமாவில் ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தை சேர்ந்தவர் ராஷ்மிகா. கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சில கன்னட படங்களில் நடித்துவிட்டு, தெலுங்குக்கு சென்றார். அங்கு பிரபலம் ஆனதும் தமிழில் அறிமுகம் ஆனார். இப்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். இடையில் மீண்டும் கன்னட வாய்ப்புகள் வந்தபோது அவர் அதை ஏற்கவில்லை. இதனால் கன்னட திரையுலகினர் அவர் மீது கடுப்பானார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கிரிக் பார்ட்டி படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானதை பற்றி சொல்லும்போது, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கோ இயக்குனருக்கோ அவர் நன்றி சொல்லவில்லை. அவர்களை பற்றி பேசவே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கன்னடத்தில் உருவான காந்தாரா படம் பார்த்தீர்களா என நிருபர்கள் கேட்டபோது, பார்க்கவில்லை என ஆணவத்துடன் அவர் பதில் சொன்னதாகவும் புகார் எழுந்தது. இதையெல்லாம் வைத்து ராஷ்மிகாவுக்கு கன்னட படங்களில் நடிக்க தடை விதித்திருப்பதாக சான்டல்வுட்டில் தகவல் பரவியுள்ளது.
இது பற்றி ராஷ்மிகா கூறும்போது, ‘காந்தாரா படத்தை பார்த்துவிட்டேன். அந்த படக்குழுவுக்கு வாழ்த்துகள். எனக்கு கன்னட சினிமாவில் யாரும் ரெட் போடவில்லை. தொடர்ந்து கன்னட படங்களிலும் நடிப்பேன். எனது நடிப்பை படத்தில் விமர்சித்தால் அதை ஏற்பேன். தனிப்பட்ட முறையில் என்னை பற்றி விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது. அவர்களது வேலையே அதுதான் என்றால் நான் எதுவும் சொல்வதற்கில்லை’ என்றார்.