உத்தர பிரதேசத்தில் கருப்பு நிற மணமகன் வேண்டாம் என கூறி கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகள்.
உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் நகரில் பனியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால், இரு வீட்டாரும் திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு இருந்தனர்.
திருமணம் நடைபெறுவதற்கு முன் மணமக்கள் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, மணமகன் வரவேற்பு நடந்தது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டது. இதன்பின்பு அழைத்து வரப்பட்ட மணமகன், அவரது உறவினர்கள் மணப்பந்தலுக்கு சென்றனர்.
மணமகன் ஊர்வலம், வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து பந்தி பரிமாறும் நிகழ்ச்சியும் தொடங்கி நடந்துள்ளது. இந்த நிலையில், மணமகளையும் உறவினர்கள் மணப்பந்தலுக்கு அழைத்து வந்துள்ளனர். மேடையில், மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்யமாட்டேன் என கூறி விட்டு மேடையை விட்டு உடனடியாக இறங்கி வீட்டுக்கு சென்று விட்டார்.
அதுவரை, மணமகன் எப்படி இருப்பார் என மணமகள் பார்க்கவில்லை என தெரிகிறது. இதனால், திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த மணமகனை அவரது உறவினர்கள் அமைதியாக இருக்கும்படி கூறி விட்டு, மணமகளிடம் பேசி அவரை சமரசப்படுத்த முயன்றுள்ளனர்.
ஆனால், மணமகள் அதனை கேட்க தயாராகவேயில்லை. தனக்கு கருப்பு நிற மணமகன் வேண்டாம் என கூறியுள்ளார். இதனால், மணமகள் இல்லாமல் மணமகனின் உறவினர்கள் தனியாக திரும்பியுள்ளனர். நிலைமை மோசமடைந்த சூழலில், கிராம மக்கள் மணமகளிடம் பேசி, வழிக்கு கொண்டு வர முயற்சித்தனர். ஆனால், அதற்கு மணமகள் ஒப்பு கொள்ளவில்லை.
இதனை தொடர்ந்து போலீசாரிடம் புகார் சென்றது. இதன்பின்னர், மணமகள் உள்பட முக்கிய பிரமுகர்களை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், மணமகள் தனது முடிவில் இருந்து மாறாமல் இருந்துள்ளார். கடைசி நேரத்தில் எடுத்த மணமகளின் முடிவால் திருமணம் நின்று போனது, அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
newstm.in