காரில் தொங்கிய மேயர் – விமர்சிக்கும் அண்ணாமலை

மாண்டஸ் புயல் நேற்று முன் தினம் நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்தது. எனவே சென்னையில் பல்வேறு இடங்களில் பொருள்கள் சேதமாகின. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புயலால் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.

அந்தவகையில் சென்னை காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் மற்று மழை பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வை முடித்துவிட்டு புறப்பட்டபோது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் ப்ரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் உள்ளிட்டோர் தொங்கியபடி பயணம் செய்தனர்.

அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளன. மேலும் பெண் உரிமை பேசும் திமுக தனது ஆட்சியில் இருக்கும் மேயரை இப்படியா நடத்துவது என பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் மேயர் ப்ரியா கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “சுய மரியாதை, சமூகநீதி, மற்றும் சாமானியர்களின் கட்சி என்ற திமுகவின் போலி கதைகள் மீண்டும் வெளிப்பட்டுள்ளது” என புகைப்படங்களை பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.