கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக கால்நடைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது
இந்த நிலையில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் உடனடியாக சம்பந்தப்பட்ட கால் நடை பண்ணையாளர்களுக்கு தெளிவுபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் மாகாண
பணிப்பாளரிடம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார்.குறைந்தபட்ச வசதிகள் ஏதுமின்றி வனப்பகுதிகளில் விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கால்நடைகளுக்கு போதிய உணவு மற்றும் தண்ணீரை வழங்குமாறு கால் நடை பண்ணையாளர்களுக்கு அறிவிக்குமாறும், கால் நடைகளுக்கு சூடேற்றுவதற்கு தேவையான தீப்பந்தங்களைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாகாணப் பணிப்பாளரிடம் ஆளுநர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 256 மாடுகள் உயிரிழந்துள்ளதாக மாகாண கால் நடைகள் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. கடுமையான குளிர் காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 210 பசுக்களும், அம்பாறை மாவட்டத்தில் 16 பசுக்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல், கால்நடைகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும் விவசாயிகளைக் கையாள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆராயுமாறும் மாகாண பணிப்பாளருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.