காவிரி படித்துறை குப்பை கிடங்கானது ஆதிகும்பேஸ்வரர் பஞ்சமூர்த்தி மண்டபம் கால்நடைகளின் கூடாரமா?

* மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
* பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கும்பகோணம்: கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் திருமஞ்சன வீதி காவிரி படித்துறையில் மலைபோல் குப்பைகள் குவிந்து குப்பை கிடங்கானது. மேலும் பஞ்சமூர்த்தி மண்டபம் கால்நடைகள் கட்டும் கூடாரமாக மாறி போனது இதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கும்பகோணத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோயில் திருமஞ்சன வீதி காவிரி படித்துறை உள்ளது. ஆடிப்பெருக்கு தினத்தன்று இந்த படி துறையில் கோலாகலமாக கொண்டாட்டம் நடத்துவது வழக்கம்.திருவிழா காலங்களில் பல்வேறு கோயில்களில் இருந்து சாமிகள் வந்து காவிரி ஆற்றில் புனித நீராடி விட்டு தீர்த்தக்குடங்கள், பால்குடம், காவடி போன்றவை அலங்கரித்து ஊர்வலமாக புறப்பட இந்த படித்துறைக்குத்தான் வருவர்.

இந்நிலையில் இந்த ஆற்றின் படித்துறை பகுதியில் அதிக அளவிலான குப்பைகள், மண்சட்டிகள் வறண்ட காவிரியின் மணற்பரப்பில் மூக்கை சுளிக்கும் அளவுக்கு பொதுமக்களால் விடப்பட்ட துணிகள் ஆங்காங்கே தேங்கி அலங்கோலமாக காட்சி அளித்து வருகிறது. மேலும், காவிரி படித்துறையின் படிக்கட்டுகளில் அப்பகுதிவாசிகள் வளர்க்கும் மாடுகளின் சாணங்களை மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதனால் அங்குள்ள குடியிருப்பாளர்கள் சுகாதாரம் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார்கள்.

இதேபோன்று இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத சில மதுப்பிரியர்கள் அங்கு மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். சிலர் காலை வரை இங்கேயே படுத்து உறங்குகின்றனர். அவர்களால் இங்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி காவிரி படித்துறையின் கரையில் முற்றிலும் கருங்கல்லால் ஆன திருமஞ்சன பஞ்சமூர்த்தி மண்டபம் அமைந்துள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற மகாமக பெருவிழா தொடர்புடையது.

12 சைவ திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதி அன்று சுவாமி, அம்மன், விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் அன்றைய தினம் காலை கோயிலில் இருந்து புறப்படும். தொடர்ந்து கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி காவிரி படித்துறையில் உள்ள பஞ்சமூர்த்தி மண்டபத்திற்கு பல்லக்கில் கொண்டு சென்று வைத்து விடுவர்.
அங்கு அஸ்திரதேவருக்கு காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும்.

தொடர்ந்து அன்று மாலை கோயிலில் பஞ்சமூர்த்திகளையும் அலங்கரித்து ரதத்தில் வீதியுலா புறப்பாடு நடைபெறும். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அந்த மண்டபம் போதுமான பராமரிப்பு இல்லாமல் மிகவும் சிதிலமடைந்து உள்ளது. இதனால் தை மாத தீர்த்தவாரிக்கு பஞ்சமூர்த்திகள் திருமஞ்சன வீதி மண்டபத்திற்கு செல்வதில்லை.மேலும் மண்டபத்தின் மேல் முகப்பில் பஞ்சமூர்த்திகள் சுதை சிற்பம் மற்றும் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த மண்டபத்தில் செடி, கொடிகள், மரங்கள் முளைத்து பாழ் பட்டு கிடக்கிறது.

மேலும் அப்பகுதியில் உள்ளவர்கள் அவர்களது மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கட்டும் கூடாரமாக இருந்து வருகிறது. அதுபோல மாட்டின் சாணங்களால் ஆன வரட்டிகளை படித்துறையின் படிக்கட்டுகளிலும், புறப்பகுதிகளிலும் வரட்டி தட்டி வைத்து குடோனாக செயல்படுத்தி வருகின்றனர்.பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மகாமகத்தின் போது முன்பிருந்த தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் பக்தர்களின் கண்துடைப்பிற்காக சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த பஞ்சமூர்த்தி மண்டபத்தை அறநிலையத்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

உலகில் முதன்முதலாக தோன்றிய கோயிலின் பஞ்சமூர்த்தி சுவாமிகள் மண்டபம் என்பது இங்கு மட்டும்தான் உள்ளது என்ற பெருமையை கொண்ட இந்த இடத்தில் கடந்த 20 வருடங்களுக்கும் மேல் இந்த நிலைமை நீடிப்பதாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.எனவே மாநகராட்சி சார்பில் இந்த மண்டபத்தை சீரமைக்கவும், படித்துறையின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.