கேரி கேனின் பெனால்டி கிக் மிஸ் மட்டுமல்ல; இங்கிலாந்தின் டீசண்ட்டான ஆட்டமும் பிரச்சனைதான்!

உலகக்கோப்பை போட்டிகளின் 4 வது மற்றும் இறுதி காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஃபிரான்ஸ் மற்றும் கடந்த முறை அரை இறுதிக்கு முன்னேறியிருந்த இங்கிலாந்து என வலிமை வாய்ந்த இரு ஐரோப்பிய அணிகள் மோதின. இதில் ஃபிரான்ஸ் ‘கடந்த பல உலகக்கோப்பை போட்டிகளில் நடப்பு சாம்பியன் அணிகள் முதல் சுற்றைத் தாண்டுவதில்லை’ என்கிற கண்ணுக்குத் தெரியாத சாபத்தை முறியடித்தும், கடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் தோல்வியுற்று நான்காம் இடம் பிடித்த இங்கிலாந்து இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்புடனும் களமிறங்கின.

இரு அணிகளுக்குமிடையே நடந்த கடந்த எட்டு போட்டிகளில் ஒரே ஒரு முறைதான் இங்கிலாந்து வென்றிருக்கிறது என்கிற சாதகமான அம்சம் ஃபிரான்சுக்கு இருந்தது. அதே போல ரிசர்வ் பெஞ்ச்சில் கூட மிகத் திறமையான வீரர்களைக் கொண்ட அணி என்கிற பலம் இங்கிலாந்துக்கும் இருந்தது.

ஃபிரான்ஸ், இங்கிலாந்து

ஒரு வகையில் இது வரை நடந்த போட்டிகளின் நேற்று நடந்த ஃபிரான்ஸ் – இங்கிலாந்து போட்டியை கால்பந்து விளையாடுவது எப்படி என்பதற்கான மாதிரி போட்டியாக முன்வைக்கலாம். நேற்று இரு அணியினரும் கால்பந்தை கிட்டத்தட்ட அது ஆடப்பட வேண்டிய விதத்தில் ஆடினார்கள் என்று சொல்லலாம். இங்கு நான் ஆடப்பட வேண்டிய விதம் என்று குறிப்பிடுவது ஆட்டத்தை அழகாக ஆடும் முறையை அல்ல. ஆட்டத்தை முறையாக ஆடும் முறை என்பதாக இதைப் புரிந்து கொள்ளவும்.

பெரும்பகுதி முரட்டுத்தனமில்லாத ஆட்டம், துல்லியமான பாஸ்கள், குறிப்பிட்ட இடைவேளையில் நடந்து ஊடுறுவல் தாக்குதல்கள், பிசகில்லாத தடுப்பாட்டம், அதே நேரம் அவற்றை முறியடித்த தாக்குதல் ஆட்டங்கள் என இரு அணிகளுமே ஒரு டெக்ஸ்ட் புக் ஆட்டத்தை ஆடின.  ஃபிரான்ஸின் எம்பாப்பே, ஜிரூ, கிரீஸ்மேன் ஆகியோரின் ஆட்டம் பொறுப்பான ஒன்றாக இருந்தது. கடந்த போட்டிகளை ஒப்பிட நேற்றைய ஆட்டத்தில் கிரீஸ்மேன் ஆட்டத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டார் என்று சொல்லலாம். வழக்கம்போல எம்பாப்வேயின் அதிவேக கவுண்டர் அட்டாக்குகளும், அந்த அதிவேகத்திலும் அவர் பந்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் கண்ணுக்கு விருந்தளித்தன.

மெஸ்சி, ரொனால்டோ

மெஸ்ஸி, ரொனால்டோக்களின் காலம் முடிவடையும் காலகட்டத்தில் எம்பாப்பே அடுத்த சூப்பர்ஸ்டாராக உருவெடுக்க அனைத்துத் தகுதிகளும் கொண்டவராகவே தெரிகிறார். அதே போல இங்கிலாந்தின் சாகாவும், கேப்டன் ஹாரி கேனும் முன்களத்தில் பங்காற்ற வழக்கம்போல பெல்லிங்ஹாம் நடுக்களத்தைச் சுழன்று, சுழன்று கவனித்துக்கொண்டார். இரு சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியில் வெற்றி தோல்வியைத் தீர்மாணிப்பவை மிக மெல்லிய வேறுபாடுகளாக மட்டுமே இருக்கும். நேற்றைய போட்டியில் இரு அணிகளுமே தங்களது முழுத் திறமையையும் முழுமையாக வெளிப்படுத்தின, எந்தக் குறையும் சொல்ல முடியாது. அப்படி இருந்தும் வெற்றி ஃபிரான்ஸின் கைவசமானதற்குக் காரணமெனச் சிலவற்றை மட்டுமே சொல்ல முடியும். 

முதலாவது யாரும் எதிர்பாராத நேரத்தில் கிரீஸ்மேனின் மயிலிறகில்  தடவியது போன்ற அஸிஸ்டில், ச்யோமெனி ஃபிரான்ஸுக்காக தூரத்திலிருந்து அடித்த, ஆட்டத்தில் ஃபிரான்ஸை முன்னிலை வகிக்க வைத்த முதல் கோல், அதற்கு சில நொடிகளுக்கு முன்பு இங்கிலாந்தின் சாகாவுக்கு மறுக்கப்பட்ட ஃப்ரீகிக் கோரிக்கை, ஹாரி கேன் ஃபிரான்ஸின் பெனால்டி ஏரியாவுக்குள் வீழ்த்தப்பட்டதற்று ஆட்டத்தின் பிரேசில் நடுவர் கொடுக்க மறுத்த பெனால்டி, ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் சக வீரர் வாக்கர் ஏற்படுத்திக் கொடுத்த பொன்னான பெனால்டி கிக் வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் கோல் போஸ்ட்டுக்கு வெளியே அனுப்பியது. இரு அணிகளுமே கோலடித்திருந்தாலும் இங்கிலாந்தின் கோல் பெனால்டி மூலமாக வந்தது. ஆனால் கள ஆட்டத்தில் இரு கோலடித்த ஃபிரான்ஸின் ஆட்டம், இங்கிலாந்தை விட நூலளவில் மேம்பட்டதாகவே இருந்தது. இவை மட்டுமே நேற்று இரு அணிகளுக்கான வெற்றி தோல்வியை முடிவு செய்தது.

இங்கிலாந்து

கடந்த முறை அரையிறுதியில் தோல்வியுற்று நான்காம் இடம் பிடித்தாலும், நான் கால்பந்து பார்க்க ஆரம்பித்த காலத்திலிருந்து இங்கிலாந்து அணி காலிறுதியில் வெளியேறுவதையே தன் வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த முறையும் அப்படியே. இத்தனைக்கும் இங்லீஷ் ப்ரீமியர் லீகில் பட்டை தீட்டப்படும் வீரர்கள் நிறைந்த அணியும் கூட. வீரர்களின் திறமைக்கும், அனுபவத்துக்கும் பஞ்சமே இல்லாத ஒரு அணி. ஆனாலும் சாம்பியன்ஷிப் என்று வரும்போது இங்கிலாந்து அணி முக்கியமான போட்டிகளில் சொதப்பிவிடுகிறது. 

ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இங்கிலாந்தின் மெக்காயருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. அதுவே இங்கிலாந்துக்குக் கொடுக்கப்பட்ட முதல் மஞ்சள் அட்டை. இந்த போட்டியில் மட்டுமல்ல, இந்த உலகக் கோப்பையில் அந்த அணி இதுவரை ஆடிய எந்தப் போட்டியிலும், எந்த வீரருமே மஞ்சள் அட்டை வாங்கவில்லை, அதுவும் முரட்டு ஆட்டத்துக்குப் பெயர் போன கால்பந்து விளையாட்டில் ஒரு ஐரோப்பிய அணி வாங்கிய ஒரே மஞ்சள் அட்டை அதுதான் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தது. 

இங்கிலாந்தின் தோல்வி கொடுத்த வருத்தம் ஒரு புறமிறக்க “இவ்ளோ டீசண்டா விளையாடி என்னய்யா பிரயோஜனம்? இப்படி விளையாடி ஒவ்வொரு தடவையும் காலிறுதியோட வீட்டுக்குப் போறதுக்கு கொஞ்சம் மத்த டீம் மாதிரி அப்டி, இப்டி விளையாண்டாதான் என்ன?” என்ற கேள்வியும் எனக்குள் எழாமலில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.