கொல்லிமலை பழங்குடி மக்களுக்கான ஒதுக்கீட்டு நிதியை வழங்க வேண்டும்; மாநிலங்களவையில் திமுக கோரிக்கை

புதுடெல்லி: கொல்லிமலை பழங்குடி மக்களுக்கான ஒதுக்கீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டுமென மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களைவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் விடுத்த சிறப்பு கோரிக்கையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை மலை பகுதியில் 14 குக்கிராமங்களில் 35 ஆயிரத்திற்கும் மேலான பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஸ்மார்ட் கல்வி, டெலி மருத்துவம், இன்டர்நெட் வசதி, வணிக ரீதியான பொருட்கள், மருத்துவம் ஆகிய தேவைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்கான முன்மொழிவை தமிழக அரசு தரப்பில் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஒதுக்கீட்டு நிதியை ஒன்றிய பழங்குடியினர் துறை அமைச்சகம் விரைந்து அங்கீகரித்து வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று முன்தினம் கேள்வி நேரத்தின் போது ஒன்றிய வெளியுறவுத்துறைக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்வியில், ‘‘இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த பல்லாயிரக் கணக்கானோர் அகதிகளாக முகாமில் உள்ளனர். கடந்த 1980களில் கருப்பு ஜூலையின் போது, இலங்கையில் இருந்து வந்து திருச்சி அகதிகள் முகாமில் உள்ள கே.நளினி என்பவருக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதேபோல் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இதற்கு முன்னர் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதா? இனிமேல் வழங்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா?’’ என கேட்டிருந்தார். இதுதொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துவதாக வெளியுறவு இணை அமைச்சர் வீ.முரளீதரன் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.