கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து நேற்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று துபாய் புறப்பட்டுச் சென்றது. விமானம் துபாய் சென்றவுடன் ஊழியர்கள் சரக்கு இருந்த பகுதியை திறந்தபோது அதில் ஒரு பாம்பு இருந்தது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்து மிகவும் பத்திரமாக பயணிகள் இறக்கப்பட்டனர். பாம்பு பிடிப்பவர்களின் துணையோடு பாம்பு பிடிக்கப்பட்டது. ஆனால் பயணிகளின் உடைமைகள் அவர்களுக்கு கிடைப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டது. பயணிகள் 7 மணி நேரத்திற்கும் அதிகமாக விமான நிலையத்தில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு பேக்கும் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே அவை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு கொடுக்கப்பட்டது.
அதன் பிறகே பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். பயணிகள் தங்களது பேக்கிலும் பாம்பு இருக்குமோ என்ற அச்சத்தில் அவற்றை வாங்கிச்சென்றனர். விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஏர் இந்தியா நிறுவனம், “உங்களுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது. கோழிக்கோட்டில் சரக்குகளை ஏற்றும்போது பாம்பு உள்ளே வந்திருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது. ஊழியர்கள் சரியாக கவனிக்காமல் விட்டிருந்தனர். இது குறித்து துபாய் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விமானத்தில் எப்படி பாம்பு வந்தது என்பது குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விமானத்தில் பாம்பு பிடிபடுவது இது ஒன்றும் புதிதல்ல. கடந்த திங்கள்கிழமை அமெரிக்க விமானத்தில் பாம்பு ஒன்றுகண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.