மௌலானா ஆஸாத் தேசிய ஃபெல்லோஷிப் திட்டத்தை( MANF) நிறுத்தக்கூடாது எனவும், சிறுபான்மையின மாணவர்களுக்கான அந்த திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனவும் விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர், பௌத்தர் உள்ளிட்ட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்பை 9, 10 வகுப்புகளுக்கு மட்டும்தான் என பாஜக அரசு சுருக்கி விட்டது. அது சிறுபான்மை மதத்தவரின் பள்ளிக் கல்வியின்மீது மிகப்பெரிய தாக்குதலாகும்.
இப்போது சிறுபான்மை மதத்தவரின் உயர் கல்வி மீது அடுத்த தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கல்விக்கென கொடுக்கப்பட்டு வந்த மௌலானா ஆஸாத் தேசிய ஃபெல்லோஷிப் திட்டம் ( MANF) முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. பிஎச்டி ஆய்வு மேற்கொள்ளும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் CSIR- UGC- NET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாயும் எஞ்சிய 3 ஆண்டுகளுக்கு மாதம் 28 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டு வந்தது.
சச்சார் குழு பரிந்துரையும் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்திய அளவில் ஆண்டுக்கு சுமார் 1200 மாணவர்கள் இதனால் பயனடைந்து வந்தனர். அதைத்தான் இப்போது பாஜக அரசு நிறுத்தியுள்ளது.
எஸ்சி, எஸ்டி சமூகங்களின் கல்வி உரிமையைப் பறிப்பதுபோலவே சிறுபான்மையினரின் கல்வி உரிமையும் பாஜக அரசால் இப்போது மறுக்கப்படுகிறது. சிறுபான்மையின மாணவர்களுக்கு எதிரான இந்த முடிவை ஒன்றிய பாஜக அரசு கைவிடவேண்டும். MANF திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.