ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான டி.ஆர்.எப். எனப்படும் எதிர்ப்பு முன்னணி, நாட்டில் பல இடங்களில் வன்முறை நிகழ்த்த திட்டமிட்டு, இளைஞர்களை திரட்டி மூளைச்சலவை செய்து வருகிறது.இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, இரு பாகிஸ்தானியர் உட்பட நான்கு பயங்கரவாதிகளைத் தேடி வருகிறது.
இதற்காக, பாகிஸ்தானைச் சேர்ந்த சலீம் ரெஹ்மானி, சைபுல்லா சஜித் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சஜ்ஜத் குல், பசித் அஹ்மத் தார் ஆகிய நான்கு பேரின் பல விபரங்களுடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ‘போஸ்டர்’கள் ஒட்டப்பட்டுள்ளன. தங்களின் தொலைபேசி, ‘வாட்ஸ்-ஆப்’ எண்கள், இ-மெயில்’ முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு என்.ஐ.ஏ., ஒட்டியுள்ள இந்த போஸ்டர்களில், தகவல் அளிப்பவரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.