திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை தேரோட்டம்: தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கடந்த 2ம் தேதி ஐம்பெருங்கடவுளர்கள் காட்சியும், கொடியேற்றமும், மறுநாள் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை தினமும் காலை மாலை நேரங்களில் உற்சவ சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், நேற்று முன்தினம் திருக்கல்யாணமும் நடந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை காலை 7.30 மணி முதல் 8.45 மணிக்குள் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகநாதா நாகநாதா என முழக்கமிட்டபடி தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் பிறையணிய்யமன் சமேத நாகநாதசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மாலையில் ஆடல்வல்லான் நடராஜப் பெருமான் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரியான இன்று (11-ம் தேதி) காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், தொடர்ந்து மதியம் 2 மணிக்கு சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. நாளை (12ம் தேதி) விடையாற்றியும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் எஸ்.சாந்தா, துணை ஆணையர் தா,உமாதேவி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.